Published : 21 Dec 2018 04:06 PM
Last Updated : 21 Dec 2018 04:06 PM

நல்ல பிள்ளையாக பணியாற்றினால் தான் மக்களிடத்தில் செல்லப் பிள்ளையாக முடியும்; ஸ்டாலின் பேச்சு

நல்ல பிள்ளையாக பணியாற்றினால் தான் மக்களிடத்தில் ஒரு செல்லப் பிள்ளையாக பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு 11 பேராயர்களுக்கு சிறப்பு செய்து, கொளத்தூர் தொகுதியில் உள்ள போதகர்கள் 67 பேருக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும், 625 கிறிஸ்துவ மக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு உரையாற்றினார். அதன் விவரம்:

"கட்சியில் மட்டுமல்லாமல் தொடக்க காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக பலமுறை ஆயிரம் விளக்கு தொகுதியிலே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன். வெறும் எம்எல்ஏவாக மட்டுமல்ல இடையிலே இரண்டு முறை சென்னை மாநகர மேயராகவும் பணியாற்றியிருக்கின்றேன். கொளத்தூர் தொகுதியில் நல்ல பிள்ளையாக பணியாற்றினால் தான் மக்களிடத்தில் ஒரு செல்லப் பிள்ளையாக பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

முதன்முதலில், 1989-ம் ஆண்டு மாநில சிறுபான்மையினர் வாரியம் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். 1999-ம் ஆண்டு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நிதியுதவி, கடன் உதவி உள்பட பல நலத்திட்டங்களை வழங்கியதும் தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தான்.

அதேபோல், சிறுபான்மை இயக்குநரகம் உருவாக்கி அதற்கு தனியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியையும் நியமித்தவர் தலைவர். ஏழை, எளிய சிறுபான்மை சமுதாய மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்திட சிறுபான்மை சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு நிதியுதவி என்ற வகையில் 47 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டதும் திமுக ஆட்சியில் தான்.

அதேபோல், 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை, 11 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொகை என சுமார் 4,24,867 மாணவர்களுக்கு 321.27 கோடி ரூபாய் வழங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

கிறிஸ்துவ தமிழறிஞர் வீரமாமுனிவரின் நினைவினைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக 2009-ல் அறிவித்து பெருமைப்படுத்தியவர் தலைவர்.

இப்போது மாநிலத்தில் உள்ள ஆட்சி என்ன நிலையில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அதேபோல், மோடி தலைமையிலான மத்திய அரசு மதவாதம் பிடித்து இருக்கக்கூடிய ஆட்சி. சிறுபான்மை மக்களுக்கு விரோதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி மோடி தலைமையிலான பாஜக ஆட்சி. இவற்றை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்" இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x