

தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளில் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் யாரும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாக அதிமுக கொறடா அளித்த புகாரின் பேரில் டிடிவி அணி எம்.எல்.ஏக்கள் 18 பேரிடம் விளக்கம் கேட்ட சட்டப்பேரவைத் தலைவர் அவர்களைத் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்க 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார்.
தங்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக 18 பேரும் அறிவித்தனர். பின்னர் இல்லை என முடிவெடுத்தனர். 18 பேரில் ஒருவர் மேல் முறையீடு செய்தாலும் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் தள்ளிப்போகும்.
மேல்முறையீடு செய்தால் அது தமிழக அரசுக்கு சாதகமாகவே அமையும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்யாவிட்டால் தீர்ப்பு வெளியான நாளிலிருந்து 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானால் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் தற்போதுள்ள அதிமுக வென்றால்தான் அரசு பெரும்பான்மை பெற முடியும்.
இதனால் தேர்தலை தள்ளிப்போடுவதாக டிடிவி தரப்பிலும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதவிர திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியும் இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலையில் காலியாக உள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த உள்ளதாக ஏற்கெனவே தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளின் நிலவரம் குறித்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள அரோரா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தகவல் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹு, தமிழக சட்டப்பேரவைச் செயலரிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும், 18 சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்களின் பதவி நீக்கம் குறித்து இதுவரை யாரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்ற நிலையில் வரும் ஜனவரி 25-ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
இதன்மூலம் 18 தொகுதிகள் மற்றும் 2 தொகுதிகளுக்கு பிப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது.