Published : 24 Dec 2018 09:35 AM
Last Updated : 24 Dec 2018 09:35 AM

மழைநீர் வடிகால்களில் தூர்வார நவீன இயந்திரம்: சோதனை முறையில் பயன்படுத்தும் மாநகராட்சி

சென்னை மாநகரப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் ஆட்களை இறக்காமல் தூர் வாரவும், அடைப்புகளை நீக்கவும் நவீன இயந்திரத்தை வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக சோதனை முறையில் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி தூர் வாரும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 1,894 கிமீ நீளமுள்ள 7,350 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில், நீண்ட, மூடப்பட்ட மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்னதாக இந்த மழைநீர் வடிகால்களில் தூர் வாரப்படுகிறது. மழைநீர் வடிகால்கள் பலவற்றில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால், அவற்றில் தூர் வாருவது சிரமமாக உள்ளது. அவற்றில் ஆட்களை இறக்கி தூர் வாரவும் நீதிமன்றத் தடை உள்ளது. இந்நிலையில் ஆட்களை இறக்காமல், நவீன இயந்திரம் மூலமாக தூர் வார மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி பகுதிகளில் மூடப்பட்ட மழைநீர் வடிகால்களில் தூர் வாருவது சிரமமாக உள்ளது. அதனால் நவீன உறிஞ்சு இயந்திரங்கள் மூலமாக தூர் வார நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக பல்வேறு நிறுவன இயந்திரங்களின் செயல்பாடு களை ஆய்வு செய்தோம்.

அடைப்பு நீக்கம்

அதில் சிறப்பு அம்சங்கள் நிறைந்த 6 இயந்திரங்களுடன் கூடிய வாகனங்களை ரூ.63 கோடி செலவில் வாங்கி இருக்கிறோம். அதற்காக சோதனை முறையில் ஒரு நவீன இயந்திரத்தை வரவழைத்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர் வாருதல் மற்றும் அடைப்பு நீக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நவீன இயந்திரத்தில் இந்த இரு பணிகளையும் செய்யமுடியும். இதற்கான செலவில் ரூ.31 கோடியை, மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் வழங்குகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x