Published : 13 Dec 2018 11:32 AM
Last Updated : 13 Dec 2018 11:32 AM

3 நாளேயான சிசுவை விற்ற தாய்: பெண் புரோக்கரை தேடும் போலீஸ்

கோவை சூலூரை அடுத்த கரையான்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (42). அவரது மனைவி ஜெயலட்சுமி (37). ஜெயலட்சுமி விவசாயக் கூலி வேலைக்கும், குடிப்பழக்கத்துக்கு அடிமையான வெங்கடேன் பெயின்ட் அடிக்கும் வேலைக்கும் சென்று வந்துள்ளனர். ஜெயலட்சுமிக்கு கடந்த 6-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, 9-ம் தேதி மருத்துவமனையில் யாரிடமும் சொல்லாமல் குழந்தையுடன் ஜெயலட்சுமி திடீரென கிளம்பிச் சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து, அவரது வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள், “ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்து 3 நாள்தான் ஆகிறது. ஆனால், வீட்டுக்கு குழந்தையை அவர் எடுத்துவரவில்லை” என சைல்டுலைன் அமைப்பினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சைல்டுலைன் அமைப்பைச் சேர்ந்த எஸ்.உமாதேவி உள்ளிட்டோர் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, “என்னால் குழந்தையை வளர்க்க முடியவில்லை. அதனால், கடந்த 9-ம் தேதி இரவு பெண் புரோக்கர் மூலம் கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுவிட்டேன்” என்று ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் குழந்தையை வாங்கிச் சென்ற தம்பதியிடமிருந்து குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி அனுமதித்தனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், ஜெயலட்சுமி- வெங்கடேசன் தம்பதிக்கு மொத்தம் 7 குழந்தைகள் இருந்ததும், அதில் 3 குழந்தைகள் மட்டுமே தற்போது அவர்களின் பராமரிப்பில் இருப்பதும் தெரியவந்தது. ஜெயலட்சுமிக்கு குழந்தைகளை விற்றுக் கொடுப்பதில் புரோக்கராக செயல்பட்ட பெண் தலைமறைவாகிவிட்டார்.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சைல்டுலைன் அமைப்பினர் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஜெயலட்சுமியின் மேலும் 3 குழந்தைகள் தற்போது எவ்வாறு உள்ளனர். ஜெயலட்சுமியிடம் குழந்தைகளை வாங்கி விற்றது போல, பெண் புரோக்கர் வேறு பெண்களிடமும் குழந்தைகளை வாங்கி விற்றாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட ஆண் குழந்தையை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்க இருப்பதாக சைல்டுலைன் அமைப்பினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x