Published : 03 Dec 2018 11:36 AM
Last Updated : 03 Dec 2018 11:36 AM

பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்த சமூக ஆர்வலர்

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர் பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்தார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகள் பலவற்றை மீட்டார்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் கோயில் சிலைகள் கொள்ளை போனதைக் கண்டுபிடித்து அதில் தொடர்புடையவர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்தும் மீட்டுக் கொண்டு வந்தார்.

கடந்த நவம்பர் 30 ஆம் தேதி பொன் மாணிக்கவேல் ஓய்வு பெறவிருந்த நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவியை மேலும் ஓராண்டு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாகச் செயல்படுவார் என உத்தரவிட்டது.

இதுவரை விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது என என்னென்ன பணிகளை இதுவரை செய்துவந்தாரோ அதே பணிகளை அவர் தொடர்வார் என உத்தரவிட்டது.

தமிழக அரசும், மத்திய அரசும், சிபிஐயும் அவரது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பொன் மாணிக்கவேலுவுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, திருத்தணி முருகன் கோயிலில், சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார், ஐஜி பொன் மாணிக்கவேல் போன்று வேடமிட்டு ஞாயிற்றுக்கிழமை காவடி எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x