

ஆவடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரையும், அவரது மனைவியையும் கொலை செய்து 50 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது வீட்டுவேலைக்காக அமர்த்தப்பட்ட இளம் தம்பதி என்பதைக் கண்டுபிடித்துள்ள போலீஸார் அவர்கள் படத்தை வெளியிட்டு தேடி வருகின்றனர்
சென்னையை அடுத்த ஆவடி சேக்காடு ஐயப்பன் நகரில் வசித்து வந்தவர் ஜெகதீசன்(62). இவரது இரண்டாவது மனைவி விசாலினி (60). இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள். தனியாக வசித்து வந்தனர்.
கடந்த 26-ம் தேதி வழக்கம்போல் இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவில் அவர் வீட்டிலுள்ள நாயைத் தாக்கி, இருவரும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டிலிருந்த 50 சவரன் தங்க நகைகளும், இருசக்கர வாகனமும் திருடப்பட்டிருந்தது.
காலையில் தச்சு வேலைக்காக வந்த ஊழியர் ஒருவர் தம்பதி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஆவடி போலீஸுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுவாக கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வருபவர்கள் ஆட்களைக் கொல்ல மாட்டார்கள். ஆனால் அறிமுகமான நபர்கள் கொள்ளையடிக்கும்போது தங்களைக் காட்டிக்கொடுக்காமல் இருப்பதற்காக கொலை செய்வார்கள்.
இந்தக் கொலை வழக்கிலும் போலீஸார் விசாரணையில் ஒரு உண்மை வெளிவந்தது. ஜெகதீசன் வீட்டைப் பராமரிக்க ஆந்திராவைச் சேர்ந்த கைக்குழந்தையுடன் வந்த இளம் தம்பதியை வீட்டில் தங்க வைத்துள்ளார். சில மாதப் பழக்கத்தில் அவர்கள் யார் எவர் என விசாரிக்காமல் அவர்களது தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பி சுரேஷ்குமார் மற்றும் கைக்குழந்தையுடன் இருக்கும் அவரது மனைவியை வீட்டின் பின்பக்கம் தனியாக தங்கிக்கொள்ள இடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கொலைக்குப் பின் அந்த வேலைக்கார தம்பதியைக் காணவில்லை.
அவர்கள் நகைக்காக கொன்றிருக்கலாம் என போலீஸார் அந்தக் கோணத்தில் ஆந்திராவுக்கு தனிப்படையை அனுப்பி விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் தங்கியிருந்த சுரேஷ்குமார் என்கிற அந்த வேலைக்காரர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் விசாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ள 20 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
20 கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட நபரை நம்பி வீட்டில் தங்க அனுமதித்த தம்பதி அநியாயமாக கொல்லப்பட்டனர். கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சுரேஷ்குமார் தலைமறைவாகியுள்ளதால் அவரையும், அவரது மனைவியையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.
தற்போது சுரேஷ்குமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், ஆந்திர போலீஸாரிடம் சுரேஷ்குமார் சிக்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.