

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 1170 கி.மீ.தொலைவில் நிலைகொண்டுள்ளது.
மேலும் இது இன்று இரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளை இது புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலைப்படி வட தமிழக கடற்கரைப்பகுதி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக டிச. 15, 16 தேதிகளில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். ஓரிரு இடங்களில் சில நேரம் கனமழையும் பெய்யக்கூடும். மீனவர்கள் டிச. 15, 16 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது உள்ள நிலையில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கிறோம். இது 1120 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் உள்ளது. நகர்ந்து வரும் நிலையில் மாற்றங்கள் உள்ளதால் தெளிவாக எங்கு கரையைக் கடக்கும் என்று கூறமுடியாது.”
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.