

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது குறித்து ஒரு கருத்தையும் கூறாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அவர் கூறினார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது அவரது விருப்பம். அதில் கருத்து கூற ஒன்றுமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். இதுகுறித்த கேள்விக்கு எந்தவித விமர்சனமும் செய்யாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:
”முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் சிலை வைத்து திறக்கிறார். அதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களை அழைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அது மட்டுமே எனக்குத்தெரியும்.
தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி அமைக்கின்ற சூழல் உருவாகும்.அப்போது பத்திரிகையாளர்களை அழைத்து கட்டாயம் சொல்வோம். விதிகள் மீறப்பட்டதால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அரசு நடவடிக்கை எடுத்து மூடப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு வந்துள்ளது.
நாங்கள் பசுமைத் தீர்ப்பாய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.