

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோபாலபுரம் வந்த மாற்றுத்திறனாளிகள் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர், பின்னர் அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த அவர்களுக்கு உதவிப்பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை, சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பல்வேறு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், மு.க.ஸ்டாலினை பல்வேறு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது எம்.முகமது காசீமை நிறுவனத் தலைவராக கொண்ட புதுக்கோட்டை அட்சயா மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச்சங்கத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு டப், பாய், வேட்டி, புடவை, பால்பவுடர், 2019 காலண்டர், மிளகாய், பருப்பு உள்ளிட்ட சமையலுக்கான மளிகைப் பொருட்கள் மற்றும் தையல் இயந்திரத்தையும் வழங்கினார்.
ரெ.தங்கம் தலைமையிலான தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தைச் சார்ந்த 40 மாற்றுத் திறனாளிகளுக்கு வேட்டி, புடவை, இனிப்பு மற்றும் ஒரு மூன்று சக்கர சைக்கிளையும், எஸ்.எஸ்.ஜோதி தலைமையிலான திராவிட மாற்று முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த 40 பேருக்கு, கண் கண்ணாடி, ஹாட்பேக், ஒரு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் ஸ்டாலின் வழங்கினார்.
இதேபோன்று நா.கருணாநிதி தலைமையிலான திமுக பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்களுக்கு பார்வைத் திறன் அற்றவர்கள் பயன்படுத்தும் குச்சியையும் ஸ்டாலின் வழங்கினார்.