

உரிமைகளை நசுக்கி, அடக்கி ஆளுவதற்காக உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவி மாநிலங்களுக்குத் தேவையில்லை என திருச்சியில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியார் நினைவு நாளை யொட்டி பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நேற்று பெரியார் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் தலைமை வகித்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிய பொதுவுடமைக் கட்சி நிறுவனத் தலைவர் வே.ஆனைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீர பாண்டியன், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், ஓவியர் டிராஸ்கி மருது மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
மாநாட்டில், மாநில உரிமை களை நசுக்கி, மாநிலங்களை அடக்கி ஆளுவதற்காக ஆங்கி லேயர்களால் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவி மாநிலங்களுக்கு தேவையில்லை. தமிழகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் முழுமையாக அழிக்க முயற் சிக்கும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும். ஆணவப் படு கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். கோயில்கள், வழிபாட்டு தலங்களில் தமிழில் மட்டுமே வழிபாடு இருக்க வேண்டும். கல்வித் துறையை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டடைன பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து, ஆண்டுதோறும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கே.டி திரையரங்கம் அருகிலிருந்து தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இதில் கி.வீரமணி உட்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.