

படம்: எல்.சீனிவாசன்
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ் டிஏ) சார்பில், கடந்த டிச.26-ம் தேதி முதல் தொடர் போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து 16-வது நாளாக சென்னை எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். அங்கு வருவதற்காக எழும்பூர், பூங்கா நகர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை என பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் திரண்டிருந்தனர்.
இதையடுத்து, ஒவ்வொரு பகுதிகளிலும் கூடியிருந்த ஆசிரியர்களை போலீஸார் தேடித்தேடிச் சென்று கைது செய்தனர். மேலும், போராட்ட இடத்துக்குப் புறப்பட தயாராக இருந்த எஸ்எஸ்டிஏ சங்க நிர்வாகிகளும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அவர் களை விடுவிக்கக் கோரியும், போலீஸாரைக் கண்டித்தும் ஆசிரியர்கள் முழக்கமிட்டனர்.
பகுதிநேர ஆசிரியர்கள்: இதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களை பணியிலிருந்து வெளியேற்றி தங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் எழிலகம், டிபிஐ வளாகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.