ரூ.34,237 கோடி மதிப்பில் 15 தொழில் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை அனுமதி
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, தமிழக அரசு 2026-27 நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: அமைச்சரவைக் கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.34,237.39 கோடிக்கான முதலீடு, 55,096 பேருக்கான வேலை வாய்ப்பு உருவாகும் பல திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டங்கள் மாநிலத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைய உள்ளன.
இதில் மிக முக்கியமான ஒரு திட்டம் குறித்்த அறிவிப்பு பிப். 13-ம் தேதி வெளிவரும். பிப்.12-ம் தேதி இதுவரைக்கும் எந்த அரசும் நடத்தாத ஒரு ‘கன்வெர்ஷன் கான்க்ளேவ்’ நடத்த இருக்கிறோம். அதிலும் பல அறிவிப்புகள் வரவிருக்கின்றன. இதில் கெயின்ஸ் சர்க்யூட் லிமிடெட் என்னும் மின்னணு வியல் நிறுவனம், பிரின்டெட் சர்க்யூட் போர்ட்ஸ், பிசிபிஸ், கேமரா மாடியூல்ஸ், லேமினேட்ஸ் உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது.
ஜான்சன் எலெக்ட்ரிக் வாகன மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எவர்வேன் கோத்தாரி ஃபுட்வேர் நிறுவனம் 25,000 பேருக்கு வேலை அளிக்க உள்ளது. இந்நிறுவனம் அடிடாஸ் பிராண்டு காலணி, விளையாட்டுக் காலணிகள் உற்பத்தியை தமிழகத்துக்கு கொண்டு வருகிறது. கப்பல் கட்டும் சென்னை ராதா இன்ஜினீயரிங் நிறுவனத்துக்கு ஷிப் ஹல்ஸ் தயாரிக்கும் திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஜோனஸ் என்ற ஒரு ஏரோஸ்பேஸ் அண்டு டிபன்ஸ் (A & D) தொடர்பான நிறுவனத்தினர் ரேடார், ரேடார் சிஸ்டம், ஆர்டிலரி ஷெல்ஸ், மிசைல் சப் சிஸ்டம்ஸ் தயாரிக்க உள்ளனர். இந்த பெரிய முன்னெடுப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், வாகன உதிரிபாகங்கள், வயரிங் ஹார்னஸ் போன்றவை தயாரிக்கும் யசாக்கி இந்தியா பிரைவேட் லிமிடெட் , சோலார் செல் உற்பத்தி செய்யும் ஜெட்சால் நிறுவனத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கான விரிவாக்கத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வின்பாஸ்ட் தொழிற்சாலையில் இந்தியாவில் 4-வது டாப் விற்பனை கார் தயாராகிறது. டாடா ஜாகுவார் லேண்ட் ரோவர் மிகப்பெரிய முதலீடாக வருகிறது. வரும் பிப்.9-ம் தேதி ராணிப்பேட்டையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டாடா நிறுவன முதன்மை செயல் அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து கார் உற்பத்தியை தொடங்கி வைக்கின்றனர்.இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
