

விழுப்புரம் - புதுச்சேரி இடையே யூனிட் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டி ருப்பதாக நேற்று விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர் பதில் அளித்துள்ளார்.
விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளர் உதயகுமார் வருகை தந்தார். அவர், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
''விழுப்புரம், புதுச்சேரி ரயில் நிலையங்களில் உள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் - புதுச்சேரி இடையே யூனிட் ரயில் இயக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் யூனிட் ரயில் இயக்குவதற்கு வில்லியனூர், வளவனூர் ஆகிய இடங்களில் கிராசிங் நிலையம் ஏற்படுத்தினால்தான் முடியும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த பணிகள் நிறைவு பெற்ற பின்னர் விரைவில் விழுப்புரம் - புதுச்சேரி இடையே யூனிட் ரயில் இயக்கப்படும்.
அதுமட்டுமின்றி இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்ததும் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுவதோடு கூடுதல் ரயில்கள் இயக்கவும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கும், விழுப்புரத்தில் இருந்து சேலத்திற்கும் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை.
பயணிகளின் குறைகள், கோரிக்கை களை அவ்வப்போது கேட்டறிந்து, அதற்கேற்ப விழுப்புரம் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள், அழகுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ரயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்க பயணிகளும் அக்கறையுடன் செயல்பட்டு ரயில்வே நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு ரூ.20 வசூலிப்பதாகவும், இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை செய்யப்படும். அதே நேரத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு மேற்கூரை மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும்'' என்று தெரிவித்தார்.
கடலூர், சிதம்பரத்திலும் ஆய்வு
இதே போல் கடலூர், சிதம்பரம் ரயில் நிலையங்களிலும் வளர்ச்சி பணிகள் குறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வளர்ச்சி பணிகள் நன்றாக நடக்கிறது. முக்கிய பணியான விழுப்புரம் முதல் தஞ்சாவூர் வரை மின்மயமாக்கும் பணி டிசம்பர் 2019க்குள் முடிக்கப்படும். விழுப்புரம் முதல் கடலூர் வரை மின்மயமாக்கம் பணி மார்ச் 2019க்குள் முடிக்கப்படும். புவனேஷ்வர், அந்தோதயா ரயில்கள் சிதம்பரத்தில் நிற்பது குறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளோம்'' என்றார்.
அப்போது திருச்சி கோட்ட வணிக மேலாளர் அருண்தாமஸ், இயக்குதல் பிரிவு மேலாளர் பிரசன்னா,சிதம்பரம் ரயில்நிலைய மேலாளர் கனகராஜ் உள்ளிட்ட ரயில்வேத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.