

தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் நேற்று சென்னை வந்தார். அவரை குஷ்பு சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் களிடம் குஷ்பு கூறியதாவது:
சென்னை வந்த குலாம்நபி ஆசாத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தனிப்பட்ட பயணமாக அவர் சென்னை வந் திருப்பதால் அரசியல் பற்றி எது வும் பேசவில்லை. காங்கிரஸ் - திமுக கூட்டணியை கொள்கை யற்ற சுயநலக் கூட்டணி என பிரதமர் நரேந்திர மோடி விமர் சித்துள்ளார். இதைக் கூறும் முன்பு பாஜக கூட்டணியிலும், தலைவர் களிடமும் உள்ள மோதலையும், பிரச்சினைகளையும் தீர்க்க அவர் முயற்சிக்க வேண்டும்.
காங்கிரஸ் கூட்டணி சுயநலக் கூட்டணியா, மக்கள் நலக் கூட் டனியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் கிடைத்த தோல்வியில் இருந்து பாஜக மீளவில்லை. தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரவிருப்ப தாக கேள்விப்பட்டேன். மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜி னாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2016 செப்.14-ல் தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார்.
மாநிலத் தலைவர் பதவியில் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவரை மாற்ற ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் திரு நாவுக்கரசர் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், சென்னை வந்த குலாம்நபி ஆசாத்தை சந்தித்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என்று குஷ்பு வெளிப்படையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.