மத்தியிலும், மாநிலத்திலும் எந்நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்: கரூரில் மாற்றுக் கட்சியினர் இணைந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கணிப்பு

மத்தியிலும், மாநிலத்திலும் எந்நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்: கரூரில் மாற்றுக் கட்சியினர் இணைந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கணிப்பு
Updated on
1 min read

மத்தியிலும், மாநிலத்திலும் எந்நேரத் திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் திருமாநிலையூர் ராயனூர் சாலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் 30,425 பேர் திமுகவில் இணைந்தனர்.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வரவிருக்கும் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கப் போகிறார் என்பதற்கு அடையாளம் தான் 5 மாநில தேர்தல் முடிவுகள். மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியும் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கப் போகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படத்தான் போகிறது.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்து பெரம்பலூர் கூட்டத் தில் பேசியபோது, ‘கிரிமினல் கேபினட்’ என பகிரங்கமாக குற்றம் சாட்டினேன். வழக்கு போடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், நான் உண்மையைச் சொன்னதாக நினைத்துவிட்டார்கள். முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. போக்குவரத்து அமைச்சர் மீது 2,000 பேருந்துகள் கொள்முதலில் ரூ.300 கோடி முறைகேடு என கூறப் படுகிறது.

103 எம்எல்ஏக்கள் ஆதரவோடு தான் பழனிசாமி முதல்வராக உள்ளார். மைனாரிட்டி அரசாக இருந்தும் தைரியமாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் மத்தியில் மோடி இருக்கிறார் என்பதால்தான். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் நான் கைந்து இடங்களாவது கிடைக்கும் என மோடி நினைக்கிறார்.

மோடி தன்னை மன்னராக நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்றால், பழனிசாமி மனதுக்குள் தன்னை கடவுளாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவ காரத்தில் அரசு நாடகமாடுகிறது. சட்டப்பேரவையைக் கூட்டி கொள்கை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே ஆலையை மூடமுடியும்.

இந்த அரசு வெளியிடும் அனைத் தும் வெற்று அறிவிப்புகள்தான். கடந்த 8 ஆண்டுகளில் வழங்கப் பட்ட வேலைவாய்ப்புகள், தொழிற் சாலைகள் குறித்து பேரவையில் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?. தன்னை விவசாயி எனக்கூறி கொள்ளும் பழனிசாமிதான் கதிராமங்கலத்திலும், நெடுவாசலி லும் மற்றும் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்தும் போராடும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கிறார். திமுக தலைமையிலான கூட்டணி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பும் என்றார்.

முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, "தமிழக மக்களின் உரிமைகளை, நலனை மோடியிடம் அடகு வைத்துவிட்டு தமிழக மக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது. மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றிபெற்று பழனிசாமி முதல்வ ரானால் அரசியலை விட்டு விலக நான் தயார்’’ என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், கே.என்.நேரு, ம.சின்னசாமி, பொங்கலூர் பழனிசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, குளித்தலை ராமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in