Published : 27 Sep 2014 10:56 AM
Last Updated : 27 Sep 2014 10:56 AM

ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் கைது

திருவள்ளூர் மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் ஆயில் மில் தெருவில் மருந்து கடை நடத்தி வருபவர் அசோக்குமார். இவரது வியாபாரத்தில் பங்குதாரராக இருந்தவர் சுதர்சனம். இவர் ஆவடி மற்றும் பட்டாபிராமில் தனியாக மருந்து கடைகளை நடத்தி வந்தார். சுதர்சனம் அண்மையில் உயிரிழந்தார்.

சுதர்சனம் பெயரில் இருந்த மருந்துக் கடையை, அவரின் மனைவி அனுராதா மற்றும் சகோதரர் சுப்பிரமணி ஆகியோரின் பெயரில் மாற்றித் தரக் கோரி, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் விஜயராகவனிடம் விண்ணப்பித்தனர். இதற்கு அவர் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீஸார் நேற்று திருவள்ளூருக்கு வந்தனர். அவர்கள் அறிவுறுத்தலின்படி, உதவி இயக்குநர் விஜயராகவனிடம் ரூ.20 ஆயிரத்தை அசோக்குமார், அனுராதா ஆகியோர் கொடுத்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸார் விஜயராகவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x