

நாட்டின் இயற்கை வளங்களான கனிமங்கள், சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில், சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்த நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட ஆட்சித் தலைவர் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி அந்நிறுவன உரிமையாளர் சுப்பாரெட்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நாட்டின் இயற்கை வளங்களான கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பதை இரும்புக்கரம் கொண்டு அதிகாரிகள் ஒடுக்க வேண்டும். இந்த வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தனது கடமையில் இருந்து தவறிவிட்டது. இதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார்.
இதுபோன்ற சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக எந்த கருணையும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். செல்வாக்கான நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டார். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விளக்கத்தின் அடிப்படையில் சட்டப்படி முடிவெடுக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.