

கிரானைட் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் குற்றப் பத்திரிகையை தயார்படுத்து மாறு தனிப்படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, விக்கிரமங்கலம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனு மதித்த அளவைவிட கூடுதலாகவும், சில இடங்களில் அனுமதியே இல்லாமலும் கிரானைட் கற்களை வெட்டியதாக 2011-ம் ஆண்டில் புகார் எழுந்தது. அப்போதைய ஆட்சியர் உ.சகாயம் விசாரணை நடத்தி, முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
விமானங்கள் மூலம் ஆய்வு
அவர் மாறுதலான பின் மதுரை ஆட்சியராகப் பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா காவல், வருவாய், கனிமம், பொதுப்பணி உள்ளிட்ட அரசுத் துறைகளை ஒருங்கிணைந்து கிரானைட் குவாரிகளிலும் சோதனை மேற் கொண்டார். அப்போது ஜிபிஎஸ் கருவிகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆய்வு நடத்தி கிரானைட் முறைகேடுகளை துல்லியமாக கண்டறிந்தனர். இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பிரபல தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட பலரை போலீஸார் கைது செய்தனர்.
கிரானைட் வழக்குகளை மட்டும் கவனிப்பதற்கென டி.எஸ்.பி.க்கள் சரவணக்குமார், மணிரத்னம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்கொடி (சிவகங்கை), பிரகாஷ் (ராமநாதபுரம்), ஜான்பிரிட்டோ (மதுரை), வேணுகோபால் (மதுரை) உள்ளிட்டோரைக் கொண்ட சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் 12 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த சமயத்தில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் தங்கள் மீதான 47 வழக்குகளில் குற்றப்பத்திரிகை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றனர். இதனால் விசாரணை மந்தமடைந்தது.
சிறப்புக் குழு அமைப்பு
இந்நிலையில் கனிம முறைகேடுகள் குறித்து விசாரிக்க உ.சகாயம் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தடை கேட்ட தமிழக அரசின் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால், சகாயம் குழுவினர் மிக விரை வில் மதுரையில் விசாரணை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில் கிரானைட் வழக்குகளின் மீதான விசாரணையை காவல்துறையும் துரிதப்படுத்தியுள்ளது.
இதற்காக கிரானைட் வழக்கு களுக்கான தனிப்படை போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் இரு தினங்களுக்கு முன் மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சரக டிஐஜி அனந்த்குமார் சோமானி, எஸ்.பி. விஜயேந்திரபிதாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழக்குகளின் தற்போதைய நிலவரங்களைக் கேட்டறிந்தனர். பின்னர் விசார ணையை வேகப்படுத்தி அனைத்து வழக்குகளுக்கும் குற்றப்பத்திரி கையை விரைவில் தயாரிக்க வேண் டும் என தனிப்படையினருக்கு உத்தரவு பிறப் பித்தனர்.
எனவே கிரானைட் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள், சாட்சிகள், புகைப்படங்கள், செயற் கைக்கோள் வரைபடங்கள், இழப்பீடு மதிப்பீட்டு சான்றுகள், வெடிமருந்து வழக்குக்கான ஆட்சியரின் அனுமதிக் கடிதம், தாசில்தாரின் நேரடி ஆய்வுச் சான்று போன்றவற்றை சேகரித்து ஒருங்கிணைக்கும் பணியில் தனிப்படையினர் தற்போது மும்மு ரமாக ஈடுபட்டு வருகின்றனர். 47 வழக்குகளில் இறுதி அறிக் கையை தாக்கல் செய்ய தடை கோரியுள்ள உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால், மறுநாளே அனைத்து வழக்குகளின் குற்றப் பத்திரிகைகளையும் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களின் ஒப்படைக்க தயராக இருக்க வேண்டும் எனவும் தனிப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி எஸ்.பி., விஜயேந்திர பிதாரியிடம் கேட்ட தற்கு, கிரானைட் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தயார்படுத்தும் 70 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு தனிப்படைக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது என்றார்.