Published : 07 Dec 2018 01:51 PM
Last Updated : 07 Dec 2018 01:51 PM

நீலாங்கரையில் அம்மா உணவகத்தை இடிக்க வந்த அதிகாரிகள்: பொதுமக்கள் எதிர்ப்பால் கலைந்துச் சென்றனர்

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை நீலாங்கரையில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்கவந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் திரண்டு எதிர்த்ததால் கலைந்துச் சென்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அம்மா உணவகம் உள்ளது. அப்பகுதியில் உள்ள ஏழை, உழைப்பாளி மக்களுக்கு பெரும் உபயோகமாக அம்மா உணவகம் இருந்தது. அம்மா உணவகம் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டி இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரிலுள்ள அம்மா உணவகத்தை இடிப்பதற்காக நேற்றுக் காலை நீலாங்கரை காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் உதவியுடன் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.  

தகவல் அறிந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். ஏழை மக்களுக்கு உணவளிக்கும் அம்மா உணவகத்தை இடிக்க ஒப்புக்கொள்ள மாட்டோம் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி இடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் உணவகமா ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது, அம்மா உணவகம்தானே, எங்களுக்குத்தானே உபயோகப்படுகிறது. நாங்களே புகார் அளிக்காதபோது யாரோ வழக்குத்தொடுத்தார் என இடிக்க வருகிறீர்களே என பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

அதையும் மீறி அதிகாரிகள் தங்கள் பணி செய்வதற்கு இடையூறாக இருக்காதீர்கள் என இடிக்க முயன்றனர். இதையடுத்து அம்மா உணவகத்தின் முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என சுமார் 50 பேர் கையில் தட்டு வைத்தபடி அமர்ந்து கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மேலதிகாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சமபவ இடத்திற்கு வந்த மாவட்ட சுகாதார துணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி அம்மா உணவகத்தை இடிக்கமாட்டோம் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x