Published : 17 Dec 2018 06:35 PM
Last Updated : 17 Dec 2018 06:35 PM

லஞ்சம் கேட்கக்கூடாது: ‘இந்தியன் தாத்தா’ பாணியில் அதிகாரியை எச்சரித்த கமல்

கொடைக்கானல் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் சொன்ன கமல் லஞ்சம் கேட்ட அதிகாரியை போனில் அழைத்து எச்சரித்தார்.

கஜா புயலால் கொடைக்கானல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் உள்ள உள்ள குரங்கணி பாறை, மணக்காடு, குரங்குகொம்பு, பெருமாள்மலை காடு, மங்களம்கொம்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக நேரில் சென்று மக்களைப் பார்த்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களும் வழங்கி வருகிறார். நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அழைப்பு இருந்தும் தனக்கு ஏற்கெனவே கொடைக்கானலில் புயல் பாதித்த மக்களைச் சந்திக்கும் ஆய்வுப்பணி உள்ளது என தெரிவித்து கொடைக்கானல் கிளம்பி வந்தார்.

இன்று கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு தேவையான உடை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது:

கிராமத்தை தத்தெடுக்கிறோமோ இல்லையோ இவர்களைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை. இதில் எந்தப் பிசகும் இல்லாமல், அவர்களுக்குச் சேர வேண்டியதை முறையாகச் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் வலியுறுத்தல்.

கஜா புயல் சேதங்களை பல இடங்களில் நீங்கள் நேரடியாக சென்று பார்க்கிறீர்கள், அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

நான் பார்த்த இடங்களில் எல்லாம் அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்கிறார்கள். பல இடங்களிலும் இதுதான் குறையாக உள்ளது. வேறு வேலை எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வந்திருக்க வேண்டும், ஏன் வரவில்லை என்பது எங்களுடைய கேள்வி. வந்துவிடுங்கள் தயவுசெய்து என்பது எங்களது வேண்டுகோள்.

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் ஏன் கலந்துகொள்ளவில்லை?

எனக்கு இது ரொம்ப முக்கியமாகத் தெரிந்தது. இன்னும் பல விழாக்கள் அவரது பெயரால் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் இவர்களின் வாழ்க்கை அன்றாடம் நகர்ந்து கொண்டுள்ளது. அதைப் பார்க்க வேண்டும். அதை ஊடகங்கள் மூலமாக முன்னிறுத்த வேண்டும். மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும், அதற்காக நான் ஒரு ஊக்கியாக, கருவியாக உள்ளேன். அவ்வளவுதான்.

இதையடுத்து ம‌லைய‌க்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம்  அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக அந்த அதிகாரி நம்பரை வாங்கி தனது செல்போனில் தொடர்புகொண்ட கமல் அவரிடம் பேசினார்.

“வணக்கங்க. நான் கமல்ஹாசன் பேசுகிறேன். இங்க வீடு கட்டும் திட்டத்துக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்ளது. அதைக் கட்ட நீங்கள் கொடுப்பதற்கு அவங்க எதுவும் ரூ.50 ஆயிரம் முன் பணம் கொடுக்கவேண்டி உள்ளதா? (அதிகாரி அங்கிருந்து பதில் சொல்கிறார்) ஆங், அவ்வளவுதானே அவங்க எதுவும் பணம் கொடுக்க வேண்டியது இல்லையே, ( அதிகாரி பதில் சொல்கிறார்) இங்க யாரோ வந்து கேட்டிருக்காங்க. சரி. ஓக்கே.

லஞ்சம் கேட்காமல் பார்த்துக்கங்க. இங்க நாங்களும் பார்த்துக்கிட்டிருக்கோம்.” என ஊடகங்கள் முன் அதிகாரியை எச்சரித்தார்.  

'இந்தியன்' படத்தில் லஞ்ச அதிகாரியை எச்சரிக்கும் கமல் தனது நிஜ வாழ்விலும் அதேபோன்று ஒரு நிலை வரும் என எண்ணியிருக்க மாட்டார். ஆனால், அது நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x