Published : 18 Dec 2018 02:23 PM
Last Updated : 18 Dec 2018 02:23 PM

ஜெயலலிதா சிகிச்சையின்போது உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவு; விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தகவல்


ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சிகிச்சை, உணவு உள்ளிட்டவற்றுக்கு ஆன செலவுகளை அம்மருத்துவமனை நிர்வாகம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் வழங்கியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு தரப்பினரை விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் ஏற்கெனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்போலோ மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் கட்டண பாக்கி உள்ளிட்ட விவரங்களை அம்மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கியது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, 

75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மொத்த செலவு: ரூ. 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584

உணவுக்கான செலவு: ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கான கட்டண செலவு: ரூ.92 லட்சத்து 7 ஆயிரத்து 844

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு பிசியோதெரபி சிகிச்சைக்கான செலவு: ரூ. 1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319

ஜெயலலிதாவுக்கான அறை வாடகை: ரூ. 24 லட்சத்து 19 ஆயிரத்து 800

பொதுவான அறை வாடகை: ரூ. 1 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 100

அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த செலவுகள்: 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584

ஜெயலலிதாவின் இறப்புக்கு முன்னர், அக்டோபர் 13, 2016 இல் 41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் காசோலையாக அப்போலோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறப்புக்கு பின்பு, ஜூன் 15, 2017 இல் அதிமுக சார்பாக ரூ.6 கோடி காசோலையாக வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட மொத்த தொகை: ரூ.6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 304

கட்டண பாக்கி: ரூ. 44 லட்சத்து 56 ஆயிரத்து 280

இதில் உணவுக்கான ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 என்பது, 75 நாள்களில் ஜெயலலிதாவுக்கு மட்டும் வழங்கப்பட்ட உணவின் மொத்த செலவா அல்லது, அமைச்சர்கள், பார்வையாளர்களுக்கான மொத்த செலவா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x