Published : 31 Dec 2018 07:50 AM
Last Updated : 31 Dec 2018 07:50 AM

நாளை முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அரசு வேண்டுகோள்

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தமிழகத்தில் நாளை (ஜன.1) முதல் அமலுக்கு வருகிறது. அந்த தடையை அமல்படுத்த அரசுத் துறைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப் படுத்துவது, திடக்கழிவு மேலாண் மைக்கு பெரும் சவாலாக உள்ளது. தவிர, சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்கும் அவை பெரும் கேடு விளைவித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளில், 40 மைக்ரானுக்கு கீழ் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளில் 50 மைக் ரானுக்கு குறைவான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வகை பிரித்து துப்புரவு பணியாளரிடம் வழங்க வேண்டும் என்ற திட்டமும் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதிக் கப்படுவதை தடுக்கும் விதமாக, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதித்து முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 5-ம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, உணவுப் பொட்டலங்கள் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பாக்கெட்கள், பிளாஸ்டிக்கால் ஆன உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

12 வகை மாற்றுப் பொருட்கள்

இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில் மற்றும் மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி, காகிதம், மற்றும் சணலால் தயாரிக்கப்பட்ட பைகள், காகித மற்றும் துணியால் ஆன கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள், வணிகர்கள், பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்களை அழைத்து விழிப்புணர்வு கருத் தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின் றன. பிளாஸ்டிக் தடை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தலைமைச் செயலர் தலைமையில் வழிகாட்டு குழுவும் கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ள னர்.

இதற்கிடையில் பிளாஸ்டிக் தடை குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், ‘பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கே தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்று யோசனை தெரிவித்து, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளன.

பிளாஸ்டிக் தடை தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்கு மார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் நூற்றுக்கணக்கான பொருட்கள் உள்ளன. அவை அனைத்துக்கும் தமிழக அரசு தடை விதிக்கவில்லை. 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களுக்கு மட்டுமே தடை விதிக்கப் பட்டுள்ளது. நீதிமன்றம் ஒருபடி மேலே சென்று, அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்குமாறு அரசுக்கு யோசனை வழங்கியுள்ளது. எனவே, அரசின் உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சிறு, குறு தொழில் நிறுவனங் களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்யும். பிளாஸ்டிக் மீதான தடை குறித்து யாரும் அச்சப்படத் தேவை யில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x