Published : 08 Dec 2018 09:17 AM
Last Updated : 08 Dec 2018 09:17 AM

தீக்காயம், விபத்தால் முடியை இழந்தவர்களுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முடிமாற்று அறுவை சிகிச்சை தொடக்கம் 

தீக்காயம், விபத்து மற்றும் அமில காயங்களால் முடியை இழந்தவர்களுக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முடிமாற்று அறுவைச் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

தீக்காயம், விபத்து மற்றும் அமில காயங்களால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களுக்கு முடி மாற்று அறுவைச் சிகிச்சை குறித்த 3 நாள் பயிற்சிப் பட்டறை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. கை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் ரமாதேவி தலைமையில் நடந்த பயிற்சிப் பட்டறையை மருத்துவமனை டீன் சோ.பொன்னம்பல நமச்சிவாயம், லக்னோவைச் சேர்ந்த முடிமாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் விவேக்குமார் சக்சேனா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை முன்னாள் தலைவர் மாதங்கி ராமகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 200-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றனர்.

டீன் தகவல்

அப்போது டீன் சோ.பொன் னம்பல நமச்சிவாயம், துறை தலைவர் ரமாதேவி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த முடிமாற்று அறுவைச் சிகிச்சை பயிற்சிப் பட்டறை இன்று தொடங்கி வரும் 9-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் தலா 10 பேருக்கு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அரங்கத்தில் செய்யப்படும் முடிமாற்று அறுவைச் சிகிச்சை, பயிற்சிப் பட்டறை நடக்கும் இடத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

லக்னோவைச் சேர்ந்த முடிமாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் விவேக்குமார் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வர்களுக்கு முடிமாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். அவருடன் இணைந்து நமது டாக்டர்களும் முடிமாற்று அறுவைச் சிகிச் சையை செய்ய உள்ளனர்.

புறத்தோற்றத்தை சீரமைக்க

இந்த முடிமாற்று அறுவைச் சிகிச்சை, முடி இழந்தவர்கள் தங்கள் புறத்தோற்றத்தை சீரமைத்துக் கொள்ளவும், அதன் மூலம் வாழ்வில் தன்னம்பிக்கை அடையவும் ஓர் அரிய வாய்ப்பாக இருக்கும். தீக்காயம், விபத்து மற்றும் அமில காயங்களால் தலைமுடி, புருவம், மீசை, தாடி என அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படும் முடி இழப்புக்கு முடிமாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.

இந்த முடிமாற்று அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும். முடிமாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுபவர்கள் திங்கட் கிழமையில் இந்த மருத்துவ மனையின் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை துறையில் பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x