அறவாணன் மறைவு; திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

அறவாணன் மறைவு; திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

தமிழறிஞரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழின் தொன்மை குறித்த ஆய்வு நோக்கும் - தமிழ் வளர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தமிழறிஞரான க.ப.அறவாணன் அவர்கள் நவீனத் தமிழுக்கு செய்துள்ள தொண்டு அளப்பரியது.

கல்வித்துறையில் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் பங்கேற்று சிறப்பான பாடத்திட்டங்களை உருவாக்கத் துணை நின்றவர். மொழியியல், மானுடவியல், சமூகவியல் உள்ளிட்ட துறைகளில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்.

அறிவியல் கண்ணோட்டத்துடன் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்குத் துணை நின்றவர். தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்ற க.ப.அறவாணன் அவர்கள் தனது பெயரில் அறவாணர் விருது என்பதை உருவாக்கி அதனை தமிழ்ச் சான்றோருக்கு வழங்கி தமிழ் மொழியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியவர்.

திராவிட இயக்கத்தின் மீது பற்றும், முத்தமிழறிஞர் கருணாநிதியிடம் தனிப்பட்ட அன்பும் நட்பும் கொண்டிருந்தவர் க.ப.அறவாணன். நமது இனத்தின் வரலாற்றை அவசியம் படிப்பதுடன், இனத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் நாமும் வரலாறு படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதன்படி வாழ்ந்த அறவாணன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பாகும்.

தமிழறிஞர் க.ப.அறவாணனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தமிழ்ச் சான்றோர்களுக்கும் திமுக சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in