

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தண்ணீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரி செய்யாததால், கடந்த ஏழு மாதங்களாக உள் நோயாளிகளுக்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை 1907-ம் ஆண்டு கட்டப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த மருத்துவமனை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ சேவைகளை புரிந்து வருகிறது.
ஒரு நாளுக்கு 650 முதல் 1000 பேர் வரை புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த மருத்துவ மனையில் 20 பேருக்கான படுக்கை வசதியுள்ளது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் உள்நோயாளிகள் பிரிவில் உள்ள தண்ணீர் குழாய்கள் பழுதடைந்துள்ளதால், இங்கு உள் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப் படுகின்றனர். மேலும், அங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் கழிப்பறைகள் பொதுவாக இருப்பதால் நோயாளிகளுக்கு அசௌகரியமாக இருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி கூறும்போது, “தண்ணீர் குழாய்களை பழுதுபார்க்க பொதுப்பணித் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டவுடன் இந்தப் பணிகள் தொடங்கப்படும். கழிப்பறைகளை நோயாளிகள் அல்லாமல், வெளி ஆட்களும் பயன்படுத்துவதால், ஒரு பகுதி பழுதடைந்துள்ளது. அதனை சீர் செய்யவும் பொதுப்பணித் துறையிடம் கூறப்பட்டுள்ளது. மேலும், கழிப்பறைகளை பராமரிக்க ஒரு நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.