Last Updated : 19 Dec, 2018 02:31 PM

 

Published : 19 Dec 2018 02:31 PM
Last Updated : 19 Dec 2018 02:31 PM

போதுமான அளவு பணமிருந்தும் கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார்

மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு பணமிருந்தும் 'கஜா' புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

'கஜா' புயல் பாதிப்புகளை சரிசெய்ய துரித நடவடிக்கை கோரல், இழப்பீடுகளை உயர்த்தி வழங்குதல் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், திருச்சியைச் சேர்ந்த தங்கவேல், மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் 353.70 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாக 2 முறை மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு தொகை இருந்தும், 'கஜா' புயல் நிவாரணங்களுக்காக தொகையை வழங்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை வழங்கியது. அதைத்தவிர இன்று வரை வேறு எந்த தொகையும் வழங்கப்படவில்லை. மத்திய குழு ஆய்வின் அடிப்படையில் நிவாரணம் வழங்கலாம். ஆனால் தாமதப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து விளக்கங்கள் கேட்கிறது" என தெரிவித்தார்.

அதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும், அதற்காகவே விளக்கங்கள் கேட்கப்பட்டது என தெரிவித்தார். மேலும், தமிழக அரசு அளித்த விளக்கங்கள் செவ்வாய்க்கிழமை மதியம்  2.30 மணியளவில் மத்திய அரசுக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார். 

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு கோரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதோடு, தமிழக அதிகாரிகளின் குழுவும் டெல்லி சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விவரங்கள் போதுமானவையாக உள்ளதா? எப்போது முடிவெடுக்கப்படும்? என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20 ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x