Published : 02 Dec 2018 01:40 PM
Last Updated : 02 Dec 2018 01:40 PM

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் விழிப்புணர்வு பணிகளுக்கு சிறப்பு பிரச்சார குழுக்கள்

கஜா புயலினால்  பாதிக்கப்பட்ட  மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 சிறப்பு பிரச்சார குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 4 நபர்கள் கொண்ட 40 சிறப்பு பிரச்சார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இக்குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து அப்பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெருத் தெருவாக ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை  பொதுமக்களிடையே வழங்கி வருகின்றனர்.  மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொலி காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் எவருக்கேனும் காய்ச்சலோ வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள மற்றும் மருத்துவ உதவி பெற 24-மணி நேரம் செயல்படும் 104 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

ஒரு தெருவில் 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அருகில் உள்ள நடமாடும் மருத்துவக் குழு, அரசு மருத்துவமனை மற்றும் பொது சுகாதார கட்டுபாட்டு மையத்திற்கு (044-24350496 / 24334811 / 9444340496 / 8754448477) உடனே தகவல் தெரிவிக்க இக்குழுக்கள் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை 11,869 மருத்துவ முகாம்களின் மூலம் 7,32,082 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலம் 716 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.   இதன் மூலம் 1,38,002 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 4,710 நபர்களை மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய முறை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 315 இந்திய முறை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இம்முகாம்களிலும் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறத.  நேற்று (01.12.2018)  வரை 39,62,372 நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிக குப்பைகள் உள்ள இடங்களில் ஈக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க  குளோரின் பரிசோதனை குழுக்கள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 

தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோய்களை தடுக்க குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்தவும,  குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்த பின்பு குடிக்கவும், சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையில் மேற்காணும் பணிகள் மக்கள் நல்வாழ்வுத்துறையால் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x