Published : 29 Sep 2014 10:34 AM
Last Updated : 29 Sep 2014 10:34 AM

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? - ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் எதிர்பார்ப்பு

இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலாயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர “சி-டெட்” எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வையும், இதேபோல், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்குச் சேர ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் (டெட்) எழுத வேண்டும்.

கடைசியாக டெட் தேர்வு 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 17, 18-ந் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அதில் ஏறத்தாழ 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது நீதிமன்ற வழக்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) விதிமுறையின்படி, ஓராண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு தகுதித் தேர்வாவது நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் சி-டெட் தேர்வை சிபிஎஸ்இ இந்த ஆண்டு 2 சி-டெட் தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டது. முதல் தேர்வு கடந்த பிப்ரவரியிலும் 2-வது தேர்வு நேற்று முன்தினமும் நடத்தப்பட்டன.

ஆனால், தமிழகத்தில் டெட் தேர்வை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் தேர்வுக்கான அறிவிப்பையே வெளியிடவில்லை. தேர்வு தேதிக்கும் அறிவிப்புக்கும் சுமார் 3 மாதங்கள் காலஇடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் படிக்க முடியும்.

வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடத்துவதாக இருந்தால் இந்த மாதமே (செப்டம்பர்) அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், இன்னும் அதற்கான ஆயத்தப் பணிகளைக்கூட ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவில்லை.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர விரும்புவோர் “டெட்” தேர்வுக்கான அறிவிப்பினை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் தற்போது இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளும் புதிய “டெட்” தேர்வுக்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x