Published : 18 Dec 2018 05:43 PM
Last Updated : 18 Dec 2018 05:43 PM

சென்னை மாநகராட்சி ஓய்வூதியர்கள் - குடும்ப ஓய்வூதியர்கள்:  ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமல்

சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான ரூ. 4 லட்சம் மதிப்புள்ள புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்-2018  நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சென்னை மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்-2018  நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் யுனைடெட் இந்தியா ஆயுள் காப்பீட்டு கழகத்திற்கு இடையேயான ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்-2018க்கான ஒப்பந்தத்தில் சென்னை மாநகராட்சி  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பாக  வருவாய் மற்றும் நிர்வாகம் துணை ஆணையர் ஆர்.லலிதா, யுனைடெட் இந்தியா ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பாக துணை மண்டல மேலாளர் ரகுநாதனும் நேற்று ரிப்பன் மாளிகையில் கையெழுத்திட்டனர்.

இப்புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயன்பெறும் பொருட்டு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் டிசம்பர்-2018 முதல் மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து ரூ.350/- பிடித்தம் செய்யப்படும். 

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் அவர்களது கணவர்/மனைவி ஆகியோர் இத்திட்டத்தின்படி www.tnnhis2018.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் ரூ.4 இலட்சம் வரை பணம் செலுத்தாமல் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இத்திட்டத்திற்கான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்த விவரங்களை 1800-2335 5544 என்ற 24 மணிநேர இலவசக் கட்டண தொலைபேசி எண்ணிலும், www.tnnhis2018.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x