சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்
Updated on
1 min read

சாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண் கவுசல்யாவுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கணவர் சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.

கவுசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார்.

கவுசல்யா, சக்தி திருமணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ், கவுசல்யா - சக்தி திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், ''சாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண். பெரியாரின் பேத்தி தோழர் கவுசல்யாவுக்கும், பறை அடித்து பகுத்தறிவைப் பரப்பும் பாசமுள்ள தோழன் சக்திக்கும் என்னுடைய மணமார்ந்த வாழ்த்துகள்.

சலிப்பும், ஓய்வும், ஒரு சமூகப் போராளிக்கு தற்கொலைக்குச் சமம் - தந்தை பெரியார், ... கற்பி .. ஒன்று சேர்... புரட்சி செய் -  அண்ணல் அம்பேத்கர்,  பயத்தை விடு இல்லையேல் லட்சியத்தை விடு - பிரபாகரன் இந்த மூன்று போராளிகளின் வீரத்தை லட்சியத்தை மனதில் ஏற்றுச் செயல்படும் தோழர் சக்திக்கும், கவுசல்யாவுக்கும் என் வாழ்த்துகள் ” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in