

புயல் பாதித்த மாவட்டங்களில் தீவனப் பற்றாக்குறையால் நாட்டு இன மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படுவதைத் தடுக்க 41 டன் தீவனங்கள், புண்ணாக்கு உள்ளிட்டவற்றை 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு திருச்சியைச் சேர்ந்த பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் கால் நடை பராமரிப்புத் துறை சார்பில் பல கிராமங்களில் தீவனங்கள் வழங்கப்பட்டன. ஆயினும் இவை முழுமையாக அனைத்து கிராமங் களுக்கும் சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில், திருச்சியில் செயல்பட்டு வரும் பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை (BIO DIVERSITY CONSERVATION FOUNDATION) சார்பில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட குக்கிராமங் களுக்குச் சென்று அங்குள்ள மாடுகளைக் கணக்கெடுத்து, அவற் றுக்கு உணவளிக்கும் வகையில் தவிடு, கடலைப் புண்ணாக்கு, தீவனம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை இயக்குநர்கள் ஏ.குமரகுரு, பிருந்தா ஆகியோர், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: ‘‘நாகை, திரு வாரூர் மாவட்டங்களில் கிராமங் களில் பெரும்பாலும் உம்பளச்சேரி என்ற நாட்டு இனத்தைச் சேர்ந்த மாடுகள் அதிகம் வளர்க்கப்படு கின்றன. புயலுக்குப் பிறகு இந்த மாடுகளுக்கு தீவனங்கள் கிடைப் பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஒரு வீட்டில் 4 மாடுகள் இருந்தால், ஓரிரு மாடு அல்லது கன்றுக் குட்டிகளை விற்றுவிட்டு, மற்ற மாடுகளைக் காப்பாற்றலாம் என்ற முடிவுக்கு வந்து சில விவசாயிகள் மாடுகளை விற்றும் விட்டனர். இவற்றில் பல மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டன என்பது வேதனை யானது.
விவசாயியின் பாசம்
நாட்டு இன மாடுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று 16 ஆயிரம் கிலோ தவிடு, 1,500 கிலோ கடலைப் புண்ணாக்கு, 7,500 கிலோ தீவனம் ஆகியவற்றை மாடு வளர்ப்போருக்கு வழங்கினோம்.
தற்போது கூடுதலாக 10 டன் தவிடு, 5 டன் தீவனம், 1 டன் கடலைப் புண்ணாக்கு என 16 டன் தீவனம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் 41 டன் தீவனம் வழங்கப்பட்டுள்ளது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள குரவப் புலம் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி சிவாஜி என்பவர், வீட்டின் அறைக்குள் வைக்கோலைப் பாதுகாப்பாக வைத்து விட்டு, தாங்கள் சாப்பிடும் அரிசி மூட்டை களை வாசலிலேயே வைத்திருந் தார். இதில் இருந்தே மாடுகள் மீது அவர்கள் காட்டும் அக்கறையை தெரிந்துகொள்ளலாம்.
வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதலாக இருப்பது கால்நடைகளே. அதிலும், நாட்டு இனங்களைச் சேர்ந்த மாடுகளை நாம் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், இந்த முயற்சியில் ஈடுபட்டோம்.
இப்பணியில் நண்பர் செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் கை கொடுத்து உதவினர். அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, நிலைமை சீரடையும் வரையில் கால்நடைகளுக்கு உரிய தீவனங்களை வழங்க நடவடிக்கை எடுத்து, நாட்டு இன மாடுகளைப் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.