Published : 28 Dec 2018 01:47 PM
Last Updated : 28 Dec 2018 01:47 PM

வல்லநாடு அருகே தாத்தா, பேரன் வெட்டிக் கொலை: கடும் பதற்றம், போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முன்விரோதம் காரணமாக தாத்தா, பேரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வல்லநாடு அருகேயுள்ள பக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (65). இவர் சைக்கிளில் சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் ராமையா. கூலித்தொழிலாளியான இவரது மகன் சுடலைமணி (18). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள சுடலைமணி திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.

இவர் தினமும் பேருந்தில்தான் வேலைக்கு சென்று வருவார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து நகர பேருந்தில் ஏறிய சுடலைமணி, இரவு 10 மணி கடந்து விட்டதால் தனது தாத்தா முத்துச்சாமிக்கு போன் செய்து, பக்கப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்கும்படி கூறியுள்ளார்.

அதன்படி, முத்துச்சாமி தனது பேரனுக்காக பக்கப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்திருந்தார். சிறிது நேரத்தில் பேருந்து வந்து நிற்கவும், அதிலிருந்து சுடலைமணி இறங்கினார். அப்போது ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க சுடலைமணி ஓடினார். அதிர்ச்சியடைந்த முத்துச்சாமி அந்த கும்பலை விரட்டிச் சென்று தனது பேரனை விட்டு விடும்படி கூறினார்.

ஆத்திரமடைந்த அவர்கள் முத்துச்சாமியையும் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுப்பட்ட தாத்தா, பேரன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

தூத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா, ஏடிஎஸ்பி பொன்ராம், ஊரக டிஎஸ்பி முத்தமிழ், முறப்பநாடு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரனையில் கொலையான முத்துச்சாமி தரப்பினருக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவர்கள் சுடலைமணியை தீர்த்துக்கட்டும் நோக்கில் பேருந்தை பின்தொடர்ந்து வந்திருக்கலாம் எனவும், இதனால் பயந்து போன சுடலைமணி பாதுகாப்பு கருதி தாத்தாவுக்கு போன் செய்து பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்திருக்கலாம், அங்கு வைத்து இருவரையும் அந்த கும்பல் தீர்த்துக்கட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இரட்டை கொலை காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முறப்பநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x