புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.7.75 லட்சம் நிவாரணம்: அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு 

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.7.75 லட்சம் நிவாரணம்: அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு 
Updated on
2 min read

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 700 மரங்களுக்கு ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல், கடந்த நவ.16-ம் தேதி அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் கரையைக் கடந்தது. காற்றின் வேகம், கனமழை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தென்னை, மா, பலா, முந்திரி போன்ற தோட்டக்கலை பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. முதல்கட்ட நிவார ணப் பணிகளுக்காக முதல்வர் கே.பழனிசாமி, ரூ.1,400 கோடி ஒதுக் கினார். புயல், மழையால் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கும், சேத மடைந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பயிர்ச் சேதத்தை வருவாய், வேளாண் துறையினர் இணைந்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் பயிர்கள் பாதிப்புக்கு ரூ.250 கோடியும், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்புக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரணம் குறித்து கடந்த நவ.20-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், ‘கஜா’ புயல் பாதிப்பை பொறுத்த வரை, சிறு, நடுத்தர விவசாயி களின் அனைத்து விவசாய நிலங் களுக்கும் நிவாரணம் வழங்கப் படும். இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப் படும். தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மரத்துக்கு ரூ.600 இழப்பீடு, அந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மரத்துக்கு ரூ.500 நிவாரணமாக வழங்கப்படும். முந்திரி, மா, பலா மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ரூ.500 வழங்கப்படும். இதர பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான விதிகள்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தென்னை விவசாயிகளுக்கு பாதிப் புகள் அதிகமாக இருப்பதால், நிவாரணம் வழங்குவதற்கான அதிக பட்ச பயிர் அளவை உயர்த்த வேண்டும். அதாவது, 700 மரங்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த அரசு, தென்னை விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 700 மரங்களுக்கு ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் வழங்க முடிவு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதேபோல முந்திரி, மா, பலா ஆகிய தோட்டக்கலைப் பயிர்களுக்கும் அதிகபட்ச அளவு நிவாரணம் நிர்ணயிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்தார். இதன்படி, அதிகபட்சமாக 800 முந்திரி மரங்களுக்கு ரூ.4 லட்சத்து 36 ஆயிரம், 400 மாமரங்களுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் , 640 பலா மரங்களுக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் நிவாரணம் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, அதிகபட்சமாக 800 முந்திரி மரங்களுக்கு வெட்டி அகற்றும் தொகை, ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் என 2 ஹெக்டேருக்கான மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மானியமும் சேர்த்து ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் வழங்கப்படும். மாமரம், பலா மரங்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் வீதம், 2 ஹெக்டேருக்கு ரூ.36 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வருவாய்த் துறை ஊழியர்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘ஒரு விவசாயி 50 சென்ட்டில் மரம் வைத்திருந்து அதில் பாதிப்பு ஏற்பட்டால் கணக்கெடுப்பில் வருவதில்லை. அதேநேரம், ஒரு ஹெக்டேர் என்ற அளவில்தான் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. தொடர்ந்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in