

சுனாமி தாக்குதலின் 14-ம் ஆண்டு நினைவு தினம் தமிழக கடலோர பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளை சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கியது. தமிழகத்தில் 10 ஆயிரததுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நாகை மாவட்டத்
தில் மட்டும் அதிக அளவாக 6.065 பேர் இறந்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். சுனாமி தாக்கியதன் 14-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பெரும்பாலான பகுதிகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் செல்லவில்லை. கடலோர மாவட்டங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் காசிமேடு, பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகள், காஞ்சிபுரத்தில் மாமல்லபுரம், திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவ சங்கங்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் திரளாக பங்கேற்று கடலில் பால் ஊற்றியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை காசிமேட்டில், அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்பி.,பாலகங்கா உள்ளிட்டோர் படகில் சென்று கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர் கூறும்போது, ‘‘கடற்கரை மாவட்டங்களில் சுனாமி பேரலை பாதிப்பை ஏற்படுத்தியபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மீனவர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்தார். மீட்பு, மறுவாழ்வு, நிவாரண நடவடிக்கைகளை எடுத்தார். அப்போது ஜெயலலிதாவை உலகே பாராட்டியது. சுனாமிக்குப் பிறகு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்கள் கடற்கரை மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டன’’ என்றார்.
வடசென்னை அதிமுக சார்பில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தலைமையில் பேரணியாக சென்று, காசிமேட்டில் அஞ்சலி செலுத்
தினர்.
அமமுக சார்பில் அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில், மீனவப் பிரதிநிதிகளுடன் இணைந்து சுனாமியால் மறைந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மீனவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.