

அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதி செய்தவர் செந்தில் பாலாஜி என்று முதல்வர் கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அமமுக கரூர் மாவட்டச் செயலாள ருமான வி.செந்தில் பாலாஜி சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத் தைச் சேர்ந்த அமமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, தமாகா, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் நேற்று அதிமுகவில் இணைந்தனர். அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பி துரை, கரூர் மாவட்டச் செயலாள ரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவல கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்த வர்களை வரவேற்று முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
செந்தில் பாலாஜி பச்சோந்தி போல இடத்துக்கு இடம் நிறம் மாறக் கூடியவர். இதுவரை 5 கட்சிகளுக்கு சென்று வந்தவர். எந்தக் கட்சியில் இருந்து வந்தோரோ அந்தக் கட்சிக்கே இப்போது சென்று விட்டார். செந்தில் பாலாஜி ஓரு அரசியல் வியாபாரி. அதிமுகவுக்கு வந்து வியாபாரத்தை தொடங்கி முடித்துக் கொண்டார். அமமுகவுக்கு சென்றார். அங்கு சரியாக வியாபாரம் நடக்காததால் திமுகவுக்கு சென்றுள்ளார். கொள்கை பிடிப்பில்லாத இளை ஞர். இளைஞர்களுக்கு வாய்ப் பளிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அவரை எம்எல்ஏ வாக்கி, போக்குவரத்துத் துறை அமைச்சராக்கினார். அந்த நன் றியை மறந்து விட்டு அதிமுகவை உடைக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட அமமுகவுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்ட வர். அதிமுகவுக்கு துரோகம் இழைக்க நினைத்த செந்தில் பாலாஜியால் அமமுகவிலும் இருக்க முடியவில்லை.
1974 முதல் 44 ஆண்டுகளாக அதிமுகவில் இருக்கிறேன். அதனால்தான் எனக்கு இந்த விலாசம் கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜியைப் போன்ற அரசியல் வியாபாரிகள் அவ்வப்போது வரு வார்கள், போவார்கள். அவர் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதை அனைவரும் அறிவார்கள். அவர்களின் பேச்சைக் கேட்ட எம்எல்ஏக்களின் நிலை என்ன என்பதை அனைவரும் அறிவோம். நாம் விழித்துக் கொண்டோம். அதனால் பிழைத்துக் கொண்டோம். அனைவரும் சேர்ந்து அதிமுகவை பாதுகாக்க உறுதியேற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாள ரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கைப்பற்ற ஒரு கூட் டம் முயன்றது. அதையெல்லாம் முறியடித்து வெற்றிநடை போட்டு வருகிறோம். கரூரைச் சேர்ந்த ஒருவர் அதிமுகவுக்கு துரோகம் செய்து, திமுகவில் இணைந்துள் ளார். ஆனாலும் கரூரைச் சேர்ந்த அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது'' என்றார்.
அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜய பாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.வான எம்.கீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.