

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என தனது விருப்பத்தை தெரிவித்தார். இது சில பகுதிகளில் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. யார் பிரதமராக வர வேண்டும் என்று சொல்வதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு.
நாட்டை ஆள ராகுல் காந்திக்கு திறமை இருக்கிறது என்பதை உறுதியாகக் கூறுகிறேன். மத்தியில் மதச்சார்பற்ற அணிகள் எல்லாம் ஒருங்கிணைந்து கூட்டம் நடந்தது. அதில் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டது. யார் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையைப் பெறுகிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரத்பவார் கூறினார்.
பிரதமர் யார் என்பதை இப்போது முடிவு செய்ய வேண்டாம் என்று கூறியது சரத்பவாரின் கருத்து. தேர்தலுக்குப் பின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்துக் கொள்ளலாம் என்று ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோடியின் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான் மதசார்பற்ற கட்சிகளின் முக்கியமான கருத்தாக உள்ளது.
யார் பிரதமர் என்பதைக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். ஆனால், இதை ஒரு விவாதமாக ஆக்குவது குறித்து யூகங்கள் செய்கின்றனர். தனது கட்சியின் எண்ணத்தைச் சொல்ல ஸ்டாலினுக்கு உரிமை உண்டு. இதை யாரும் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பாஜகவில் மோடி நீடிப்பாரா? நிதின் கட்கரி வருவாரா என்ற கேள்விக்குறி தொடங்கி விட்டது.
பாஜகவில் உட்கட்சிப் பூசல் ஆரம்பித்து விட்டது. மதச்சார்பற்ற அணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன. புதுச்சேரியில் வார்டுகள் வரைமுறைப்படுத்த ஜனவரி மாதம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தலில் முடிவு செய்யப்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது தமிழகம், புதுச்சேரி மக்களை வந்து பார்க்க நேரம் ஒதுக்காதவர் பிரதமர். தமிழகம், புதுச்சேரி மக்களைப் புறக்கணித்து விட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் வருவது தெளிவாகத் தெரிகிறது. மத்திய குழு வந்து பார்த்துவிட்டு சென்று ஒரு மாதமாகியும் எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை.”
இவ்வாறு நாராயணசாமி பேட்டி அளித்தார்.