ஆவின் பால் முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: விஜயகாந்த்

ஆவின் பால் முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: விஜயகாந்த்
Updated on
2 min read

ஆவின் பால் திருட்டு, கலப்படம் வழக்கை தமிழக அரசே முன்வந்து சி.பி.ஐ யிடம் ஒப்படைத்து ஆவின் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக அரசு பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளை வழங்குவதாகவும், பால் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சொல்லிவருகிறது.

ஆனால் உண்மை நிலை என்ன? நிர்வாக சீர்கேட்டாலும், பல்வேறு முறைகேடுகளாலும், லாபத்தில் இயங்கவேண்டிய ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு லிட்டர் பாலுக்கு ஆறு ரூபாய் இருபத்தைந்து பைசா உயர்த்தி, ஒருலிட்டர் ஆவின் பாலை ரூபாய் 24-க்கு விற்பனை செய்ய உத்தரவிட்டார்.

பொதுமக்கள் ஆவின்பாலையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தமிழக அரசோ பொதுமக்களின் இந்த நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையிலுள்ள ஆவின் நிறுவனத்திற்கு பாலை எடுத்துவருகின்ற டேங்கர் லாரிகளின் உரிமையாளராகவும், ஆவின் பால் லாரி ஒப்பந்ததாரராகவும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் வலம் வந்த அதிமுகவை சார்ந்த வைத்தியநாதன் பல ஆண்டு காலமாக இத்தொழிலை செய்து வருகிறார்.

பால் லாரி ஒப்பந்ததாரராக இருந்த வைத்தியநாதன் ஆவின் பால் நிறுவனத்தை அவரது சொந்த நிறுவனம் போல் நடத்தி வந்தாகவும், அங்கே அவர் வைத்ததுதான் சட்டம் என்பது போலவும், ஆவின் நிறுவனத்தின் அதிகாரிகளெல்லாம் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்துதான் நடப்பார்கள் என்றெல்லாம் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் பல ஆண்டு காலமாக இந்த கலப்பட திருட்டு தொழில் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடித்து இருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த வழக்கில், தமிழக அரசு பெயரளவிற்கு வழக்கு போட்டு கைது செய்துள்ளது என்றும், இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், அதிமுக அரசு இதை மூடி மறைக்கப் பார்க்கிறது என்றும், பொதுமக்கள் பேசுகிறார்கள். திருடிய நபர்கள் மீது மட்டுமல்ல, இதற்கு துணை போன அதிகாரிகள் மீதும், வாய்மொழி உத்தரவிட்டதாக சொல்லப்படும் பதவி இழந்த அமைச்சர் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும்.

தமிழக அரசின் நடவடிக்கையில் நம்பிக்கை இல்லாமல் தானே கனிமவள கொள்ளை குறித்த உண்மைகளை வெளிக்கொணர, சென்னை உயர்நீதி மன்றமே ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அது போல இலஞ்சம், இலாவண்யம் அற்ற நேர்மையான அதிகாரி தலைமையில் குழு அமைத்து ஆவின் பால் திருட்டு மற்றும் கலப்படம் சம்மந்தமாக விசாரணை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற முறைகேடுகள் இனியும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

தற்பொழுது நடைபெற்று வரும் காவல் துறையின் விசாரணை திருப்திகரமாகவும் இல்லை, சரியான போக்கில் செல்வதாகவும் தெரியவில்லை இதனால் குற்றவாளிகள் தப்பிவிடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே தமிழக அரசே முன்வந்து இந்த வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைத்து பால் திருட்டிலும், கலப்படத்தின் மூலமும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in