

சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:
''சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெற்று சிறந்து விளங்குகிறது. பல துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
நமது வாழ்க்கை முறை மாறிப்போனதே நோய்கள் வருவதற்குக் காரணம். எனவே நாம் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்த வாழக்கை முறைக்கு மாற வேண்டும். நமது குழந்தைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். சரியான உணவு, இந்திய உணவைச் சாப்பிட வேண்டும். மேலை நாட்டு உணவுகளைச் சாப்பிடுவது தற்போது பேஷனாகி விட்டது.
தமிழ்நாடு உணவு வகைகள் சுவையானவை. மோர் குழம்பு, அவியல், சாம்பார், செட்டிநாடு சிக்கன் என பல உணவுகளும் மிகச்சிறந்தவை. ஆனால் நாம் பர்க்ர், பீட்சா என தேடி அலைகிறோம்.
உங்களுக்கு 25 வயது ஆகிறது என்றால் சிக்கன் 65 சாப்பிடலாம். தமிழகத்தில் விதவிதமான சிக்கன் ஐயிட்டங்கள் எல்லாம் உள்ளதே. அதைவிடுத்து மேலை நாட்டு சமையல் தேவையா? மேற்கத்திய மோகத்தை நாம் கைவிட வேண்டும்''.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘மகப்பேறு மற்றும் குழந்தை நலத்திட்டங்களைச் சிறப்பான முறையில் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், போன்ற பல முன்னோடி திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுகிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் மிகச் சிறப்பாக செயல்படுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலத்திற்காக மத்திய அரசின் விருதை தமிழகம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பெற்று வருகிறது'' என்றார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.