மூக்குப்பொடி சித்தர் காலமானார்: ‘தானே’ புயலையும், பணமதிப்பு நீக்கத்தையும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர்

மூக்குப்பொடி சித்தர் காலமானார்: ‘தானே’ புயலையும், பணமதிப்பு நீக்கத்தையும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர்
Updated on
1 min read

திருவண்ணாமலையில் பிரபலமான 'மூக்குப்பொடி' சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் மொட்டையக் கவுண்டர். இவர் ‘மூக்குப்பொடி’யை விரும்பிப் பயன்படுத்துவதால் ‘மூக்குப்பொடி’ சித்தர் என்று அழைக்கப்படுகிறார்.

'மூக்குப்பொடி' சித்தருக்கு வயது 85-க்கு மேல் இருக்கும். ஒரு மகன் உள்ளார். மனைவி இறந்த பிறகு ஆன்மிகத்தை தேடிச் சென்றுள்ளார். வீரபத்திரசாமியை வழிபட்டு வந்தார். திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்தார். அவர் யாரிடமும் பற்று செலுத்துவது இல்லை. தன் மகன் மற்றும் பேரப் பிள்ளைகளிடமும் அப்படித்தான் இருப்பார். அதேபோல், அவரது ஆளுமைக்குள் யாரையும் அனுமதிப்பதும் கிடையாது.

ஒரு இடத்தில் 3 மாதங்களுக்கு மேல் இருக்கமாட்டார். சிதம்பரத்தில் அதிக காலம் தங்கியிருந்தார். பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருப்பார். திடீரென சாப்பிடத் தொடங்குவார்.

ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் தனிமனிதப் பிரச்சினைகளை ‘மறைபொருள்’ மூலமாக சுட்டிக்காட்டுவார். ‘தானே’ புயல் வருவதற்கு முதல் நாள் மதியம் கடலூருக்குச் சென்று, கடலைப் பார்த்து, ‘அமைதியாக இரு, சத்தம் போடாதே’ என்று பேசினார். மறுநாள், தானே புயல் தாக்கியது. பணமதிப்பு நீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.500, ரூ.1000 தாள்களை கிழித்துப் போட்டார். கூடங்குளம் போராட்டம் தொடர்பான நிகழ்வையும் சுட்டிக்காட்டினார்.

'மூக்குப்பொடி' சித்தரின் அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது. ‘மூக்குப்பொடி’ சித்தரை டிடிவி தினகரன் பலமுறை சந்தித்துள்ளார். புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும் மூக்குப்பொடி சித்தரின் பக்தர் என்று சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஆசிரமத்தில்  தங்கியிருந்த நிலையில் 'மூக்குப்பொடி' சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in