ஜன 28-ல் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: 31-ல் வாக்கு எண்ணிக்கை

ஜன 28-ல் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: 31-ல் வாக்கு எண்ணிக்கை
Updated on
1 min read

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு ஜன. 28-ல் இடைத்தேர்தலும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் 50 ஆண்டுகாலம் திமுக தலைவராகவும், 75 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரராகவும் விளங்கிய திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதன் பின்னர் வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று ஓய்விலிருந்த அவர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மறைந்தார். அவர் மறைந்ததால் அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது:

ஜன.28 தேர்தல் வாக்குப்பதிவு

ஜன.31 வாக்கு எண்ணிக்கை

ஜன.3 அன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல்

ஜன.10-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள்

ஜன.11 வேட்பு மனு பரிசீலனை

ஜன.14 வேட்பு மனு திரும்ப பெறுதல்

ஜன. 28 திங்கட்கிழமை வாக்குப்பதிவு

ஜன. 31 வியாழன் வாக்கு எண்ணிக்கை

பிப்.2 தேர்தல் நடைமுறை நிறைவு –

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ போஸும் மறைந்ததால் அந்த தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு போட்டியிட்டு தோற்ற திமுக வேட்பாளர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளதால் அந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இதேபோன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பற்றிய தீர்ப்பு வந்ததை அடுத்து அவர்களது 18 தொகுதிகளும் காலியாக உள்ள நிலையில் அதற்கான தேர்தலை பிப்ரவரி இறுதிக்குள் நடத்தப்படும் என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பிப்ரவரியில் 18 தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in