தமிழ் மொழி, மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் கருணாநிதி: சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி புகழாரம்

தமிழ் மொழி, மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் கருணாநிதி: சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி புகழாரம்
Updated on
2 min read

தமிழ் மொழிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வாழ்வை அர்ப்பணித்தவர் கருணாநிதி என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் புகழாரம் சூட்டினர்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு: கருணாநிதி 80 ஆண்டுகளாக தனது அரசியல் வாழ்க்கையில் தமிழக மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டார். இந்திய அரசியலில் கூட்டாட்சி தத்துவத்தை முன்னெடுத் துச் சென்றார். அவருடைய அரசியல் வாழ்க்கை தற்போதுள்ள இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது. தமிழகத்தில் தற்போதுள்ள அரசு ரிமோட் கன்ட்ரோல் மூலம் செயல்படும் அரசாக இருக்கிறது. கூட்டாட்சி முறை மத்திய அரசால் முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ, ரிசர்வ் வங்கி, வருமானவரித் துறை ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நாடு முழுவதும் விவசாயம் நலிவடைந்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அடுத்த 6 மாதங்களில் வரப்போகும் மக்களவைத் தேர்தல், நாட்டுக்கு முக்கியமான தேர்தலாக இருக்கும். மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த தமிழகத்தில் இருந்து முன்னெடுக்க வேண்டும். தமிழ் மொழி, தமிழக மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கருணாநிதியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்: இளம் வயதிலேயே அரசியலில் அடி எடுத்து வைத்த கருணாநிதி இலக்கியம், திரையுலகம், அரசியல், எழுத்து, பேச்சு, பத்திரிகை என அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர். திராவிட சிந்தனையிலும், தமிழ் மொழி மீதும் மிகுந்த பற்று கொண்டவர். பெரியார், அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்தியவர். தமிழ் மொழி, கலாசாரத்துக்காகவும், தமிழக மக்கள் நலனுக்காகவும் வாழ்வையே அர்ப்பணித்தவர்.

குடிசை மாற்று வாரியம் மூலம் ஏழைகளுக்கு வீடுகள் வழங்கியவர். சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் பாதுகாவலராக திகழ்ந்தவர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே திருநங்கைகள் நலவாரியம் அமைத்தவர். தேசிய அரசியலில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தியவர். இந்திய அரசியலில் கூட்டாட்சி தத்துவத்தை முன்னெடுத்துச் சென்ற கருணாநிதியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: தமிழ் மொழி, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கருணாநிதி தன்னையே அர்ப்பணித்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டார். முதல்வராக, எதிர்க்கட்சி தலைவராக, எம்எல்ஏவாக, ஒரு கட்சியின் தலைவராக தொடர்ந்து பாடுபட்ட அவருக்கு தற்போதுள்ள தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. அவருக்கு புதுச்சேரி அரசு சார்பில் வெண்கல சிலை அமைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். மேலும், 2 சாலைகளுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளோம். எனவே, புதுச்சேரி அரசை பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். 2019-ல் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் பெரும் மாற்றம் ஏற்படும்

இவ்வாறு அவர்கள் பேசினர்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய திமுக பொருளாளர் துரைமுருகன், ‘‘நேரு குடும்பமும், கருணாநிதி குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளது. கருணாநிதிக்குப் பிறகு தலைவர் இல்லாத குறையை ஸ்டாலின் போக்கியுள்ளார். இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்திய அரசியலில் துருவ நட்சத்திரமாக ஸ்டாலின் ஜொலிப்பார். சென்னைக்கு வந்து சென்றாலே ராசிதான். எனவே, ராகுல் காந்திக்கு மிகப்பெரிய பதவி காத்துக் கொண்டிருக்கிறது. 2004-ல் முதன்முதலாக சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என அறிவித்தவர் கருணாநிதி. ஆனால், பிரதமர் பதவியை சோனியா தியாகம் செய்தார். சோனியாவின் ஒரு பிள்ளையாக ஸ்டாலின் மாறியிருக்கிறார். ஆந்திரத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர்தான் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே, தமிழக மக்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றியோடு இருப்போம்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in