

வரும் 5-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மவுன ஊர்வலத்தில், அமமுகவினர் பெரும்பான்மையாக பங்கேற்க வேண்டும் என, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5 ஆம் தேதி சென்னையில், அமமுகவின் சார்பில் நடைபெறவுள்ள மவுன ஊர்வலத்தில் உண்மை தொண்டர்களாகிய நாம் அணி திரள்வோம்.
வார்த்தைகளால் வடிக்க முடியாத பேராற்றல்லின் சொல், என்றும் நம்மை இயக்கிடும் பெரும் சக்தியின் திருவுருவம், தன் தியாக வாழ்க்கையால் தன்மானத்தையும், அன்பையும், வீரத்தையும், ஒருசேர நமக்கு ஊட்டி வளர்த்த பொன்மனம் ஜெயலலிதா. நம்மை மீளா துயரில் விட்டுச்சென்று இரண்டாண்டு காலமாகிவிட்டது.
எம்ஜிஆர் அடியொற்றி அரசியல் உலகில் தனது பயணத்தை அமைத்து, சோதனை சுடுநெருப்புக்கள் தன்னை தீண்டியபோதும், தளராத மன வலிமைகொண்டு, எதிர்ப்புகள் அத்தனையும் வென்று காட்டிய வீர சரித்திரம் ஜெயலலிதா.
ஏழைகளுக்கு ஏற்றம் தந்து, தமிழகத்தின் காவல் அரணாக திகழ்ந்திட்ட நம் அன்புத்தாயின் மறைவுக்குப் பின்னால், தன்னலக்காரர்களின் பேராசையினால், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக இன்று சிக்குண்டு இருப்பதையும், தன் அடையாளத்தையும், தனித்தன்மையையும் இழந்த காரணத்தால், அன்று தமிழகத்தின் கவசமாக திகழ்ந்த இயக்கம் இன்று பூண்டிருக்கும் அவலக் கோலத்தை மாற்றிடவே அமமுக அவதரித்து, சுயநலக்கூட்டத்திடமிருந்து அதிமுகவை மீட்கும் இயக்கமாக எழுந்துள்ளது.
இந்த சத்தியப் போராட்டத்திற்கு ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களான நீங்கள் 90 சதவிதத்திற்கு மேலானோரும், தமிழக மக்களும், தங்களது பேராதரவை வழங்கிவருவதை ஒவ்வொரு களத்திலும் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்றாலும், 'அம்மா' என்கிற மந்திர சொல், என்றும் நம்மை இயக்கிடும் பெரும் சக்தியாக நம் ஆயுள் முழுவதும் திகழ்ந்திடும். இத்தகைய பெருமைக்குரிய ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5 ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலிருந்து அமமுகவின் சார்பாக நடைபெறவுள்ள மவுன ஊர்வலத்தில், நாம் அனைவரும் பெரும் திரளாய் கூடி வங்கக் கடலோரம் துயில்கொள்ளும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சங்கமித்து இதய அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றிடுவோம்.
ஜெயலலிதா தமிழகத்திற்காக நிலைநாட்டிய அத்தனை சிறப்பையும் அவ்வழியே நின்று நாமும் நிலைநாட்டிடுவோம். ஜெயலலிதா முன்னெடுத்த அத்தனை லட்சிய போராட்டத்தையும் நாம் தொடர்ந்திடுவோம்.
சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழகத்தை தலைநிமிரச் செய்திடுவோம். டிசம்பர் 5-ல் சென்னையில் சங்கமிப்போம். ஜெயலலிதாவின் பெரும் புகழை என்றென்றும் காத்திடுவோம். என் விழிகள் உங்களை எதிர்நோக்கி" என அக்கடிதத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.