Published : 04 Dec 2018 08:35 PM
Last Updated : 04 Dec 2018 08:35 PM

பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம்: உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை உயர் நீதிமன்றம் நியமித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த வாரம் நடந்த வழக்கில் சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற ஐஜி. பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோயில் சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் அமைத்தது.

கடந்த ஆகஸ்டு 1 அன்று சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் மற்றும் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு இறுதி வாதங்களுக்குப் பின் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ''சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசுத் தரப்பு பிறப்பித்த உத்தரவு  முற்றிலும் தவறானது. உள்நோக்கம் இல்லை என அரசுத் தரப்பு தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அரசாணை சட்டவிதிகளுக்குப் புறம்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ளதால் அரசாணை செல்லாது'' என்று தீர்ப்பளித்தது.

மேலும்,  சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து ஓய்வுபெறவிருந்த ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவியை மேலும் ஓராண்டு நீட்டித்து அவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாகச் செயல்படுவார் என உத்தரவிட்டது. இதுவரை விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது என என்னென்ன பணிகளை இதுவரை செய்துவந்தாரோ அதே பணிகளை அவர் தொடர்வார் என உத்தரவிட்டது.

அவர் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்தால் போதும் என உத்தரவிட்டது. இதற்கு விமர்சனமும், வரவேற்பும் இருந்தது. இந்நிலையில் இந்தப் பிரச்சினையில் மாநில அரசின் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றத்  தலையீடு சரியல்ல என தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும், சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை கூடுதல் தலைமைச்செயலர் சார்பில் வழக்கறிஞர் வினோத் கன்னா தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் எதிர்மனுதாரர் யானை ராஜேந்திரன் ஆவார். தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x