Published : 30 Dec 2018 10:07 AM
Last Updated : 30 Dec 2018 10:07 AM

820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சி ஜன.4-ல் தொடக்கம்: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 42-வது புத்தகக் காட்சியை முதல்வர் பழனிசாமி ஜனவரி 4-ம் தேதி தொடங்கி வைக்கிறார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 820 அரங்குகள், 12 லட்சம் தலைப்புகளில் 1.5 கோடி புத்தகங்களுடன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புத்தகக் காட்சி ஜனவரி 20-ம் தேதி வரை நடக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனை யாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 42-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 4-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக ‘பபாசி ’ தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் ஏஆர்.வெங்கடாச்சலம், துணை தலைவர் பி.மயிலவேலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழன்னை உருவச் சிலை

42-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது. இதை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைக்கிறார். வாசகர்களைக் கவரும் வகையில் புத்தகக் காட்சி வளாகத்தில் தமிழன்னை உருவச் சிலை 5-ம் தேதி நிறுவப்பட உள்ளது. இதை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திறந்துவைக்கிறார்.

10 சதவீதம் தள்ளுபடி

இந்த புத்தகக் காட்சியில் மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் 12 லட்சம் தலைப்புகளில் சுமார் 1.5 கோடி புத்தகங்கள் இடம்பெறுகின்றன. இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

வேலைநாட்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் காட்சியைப் பார்வையிடலாம்.

ஆன்லைனில் நுழைவுச்சீட்டு

நுழைவுக் கட்டணம் ரூ.10. இந்த ஆண்டு முதல்முறையாக, நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பபாசியின் இணையதளத்தில் (www.bapasi.com) ரூ.10 மட்டும் செலுத்தி ஆன்லைனில் நுழைவுச் சீட்டை வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. அனைத்து நாட்களும் புத்தகக் காட்சிக்கு சென்று வரும் வகையிலான நுழைவு பாஸ் கட்டணம் ரூ.100.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமும் சிறப்பு நிகழ்ச்சி

புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாளும் வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, வளரும் இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படம், ஆவணப் படங்களை திரையிட தனி அரங்கு, வாசகர்கள் - எழுத்தாளர்கள் சந்திப்பு, முன்னணி எழுத்தாளர்களுடன் உரையாடல், தமிழின் தலைசிறந்த ஆளுமைகள், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

ஜனவரி 8-ம் தேதி கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘வாசித்தேன், யோசித்தேன்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

17 நாட்கள் நடைபெறும் புத்தகக் காட்சி ஜனவரி 20-ம் தேதி நிறைவடைகிறது. நிறைவு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.

புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்கள்:

முதல்முறையாக ஆன்லைனில் நுழைவுச் சீட்டு

வளாகத்தில் 2 ஏடிஎம்கள்

15 இடங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் செய்யும் வசதி

பாதுகாப்பு கருதி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா

இலவச வைஃபை வசதி

செல்போன்களுக்கு சார்ஜர் வசதி

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

ரத்த தானம் செய்ய விரும்புவோருக்கு ரத்த வங்கி

புதிய நூல்கள், அரங்குகள் குறித்த விவரங்களை பபாசி இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி

புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x