

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணு நேற்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 94-வது தொடக்க நாள், நல்லகண்ணுவின் 94-வது பிறந்த நாள் ஆகியவை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கே.டி.கே.தங்கமணியின் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பாலன் இல்ல வளாகத்தில் கட்சியின் கொடியை நல்லகண்ணு ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி உள்ளிட்டோர் நல்லகண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பாலன் இல் லத்துக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செய லாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் நல்லகண்ணுவுக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதி விட்டுள்ள மு.க.ஸ்டாலின், “வாழும் வரலாறு, தியாகத்தின் திருவுரு வம், பாட்டாளிகளின் பாதுகாவலர், கருணாநிதியின் தோழர், எங்களின் வழிகாட்டி, அய்யா நல்லகண்ணு நலமுடனும் துடிப்புடனும் வாழ்ந்து வழிகாட்ட வணங்கி வாழ்த்து கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்று பிறந்தநாள் காணும் நல்லகண்ணு வுக்கு எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துகள். நல்லகண்ணு அரசியலில் நேர்மையானவர், தூய்மையானவர். அனைவரிடத் திலும் அன்பாக பழகும் சிறந்த பண்பாளர். அவர் நல்ல உடல் நலத்துடன் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன'' என தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''நல்லகண்ணு என்பது அவருக்கு பெற்றோர் இட்ட பெயர். ஆனாலும், தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை “காரணப் பெயராக்கிய” பெரியவர் நல்லகண்ணுவுக்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும், நல்லவற்றையும் மனதார வாழ்த்துவோம்'' என தெரிவித்துள்ளார்.