ரூ.136 கோடி அரசு நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு: மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண் வட்டாட்சியர் கைது

ரூ.136 கோடி அரசு நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு: மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண் வட்டாட்சியர் கைது
Updated on
1 min read

ரூ.136 கோடி மதிப்புள்ள அரசு நிலத்துக்கு போலி பட்டா வழங்கி மோசடி செய்த பெண் வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.

'சென்னை சோழிங்கநல்லூரில் அரசுக்கு சொந்தமான ரூ.136 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்துக்கு நடராஜன் என்பவரின் பெயருக்கு சட்ட விரோதமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது' என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் சோழிங்கநல்லூரில் தலைமையிடத்து வட்டாட்சியராக இருந்த புனிதவதி(42) என்பவர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரிந்தது. அரசு ஆவணங்களை மாற்றி தனி நபருக்கு பட்டா வழங்க இவர் உதவி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலையில் புனிதவதியை போலீஸார் கைது செய்தனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலமும் மீட்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நடராஜன் உட்பட சிலரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள புனிதவதி மீது, சோழிங்கநல்லூர் வட்டாட்சியராக இருக்கும் ரவிச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதமும் ஒரு புகார் கொடுத்திருந்தார். 'ரூ.89 கோடி மதிப்புள்ள 9.5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் புனிதவதி அபகரித்துவிட்டார்' என்று அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின்பேரில் 26-03-2014 அன்று புனிதவதி கைது செய்யப்பட்டார். தற்போது மற்றொரு நில அபகரிப்பு புகாரின் பேரில் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in