

அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தொழில் வளர்ச்சி பற்றி முதல்வர் ஜெயலலிதா அவருக்கே உரிய பாணியில் பேசியிருக்கிறார். தமிழகத் தொழிலதிபர்கள் கர்நாடகாவுக்குப் போய்விட்டனர் என்று நானும் ஸ்டாலினும் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
தனது மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,306 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம். உண்மையில் தொழில் தொடங்கினால்தானே பலனளிக்கும்.
திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 93 ஆயிரம் ஆகும். ஆனால், தற்போது 3 லட்சத்து 78 ஆயிரமாக குறைந்துவிட்டது. இந்த ஆட்சியில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.