Published : 30 Sep 2014 09:09 AM
Last Updated : 30 Sep 2014 09:09 AM

வனத்துறை பணியாளர்கள் தேர்வுக்கு புதிய வாரியம்: வனவர்கள், வனக் காப்பாளர்கள் 609 பேர் விரைவில் நியமனம்

வனத்துறை ஊழியர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற பெயரில் புதிய தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் 609 வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக் காவலர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசின் வனத்துறையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வனப்பாதுகாவலர், வனப்பாதுகாவலர், உதவி வனப்பாதுகாவலர், மாவட்ட வன அதிகாரி, வனச்சரகர்கள் என பல்வேறு பதவி நிலைகளில் உயர் அதிகாரிகளும், வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

நேரடியாக உயர் பணியில் நியமிக்கப்படும் அதிகாரிகள் (ஐஎப்எஸ்) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலமாகவும், உதவி வனப்பாதுகாவலர்கள் (மாநில வனப்பணி), வனச்சரகர்கள் (ரேஞ்சர்கள்), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

புதிய தேர்வு வாரியம்

வனவர் (பாரஸ்டர்), வன காப்பாளர் (பாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (பாரஸ்ட் வாட்சர்) ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக்கு தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்வுசெய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் காவல்துறை, தீயணைப்புத் துறையினரைத் தேர்வுசெய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இருப்பதைப் போன்று வனத்துறை ஊழியர்களை தேர்வுசெய்யவும் தனி வாரியத்தை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற புதிய தேர்வு வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான பணிநியமன முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி வனத்துறை ஊழியர்கள் இந்த தேர்வுக்குழு மூலமாகவே தேர்வுசெய்யப்படுவர். இதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்.

வனவர் பணிக்கு பி.எஸ்சி. அல்லது பி.இ. பட்டமும், வன காப்பாளர் பதவிக்கு பிளஸ்-2-வும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு 21 முதல் 30 வரை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டு தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. வனவர் பணிக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன், நேர்முகத் தேர்வு ஆகியவையும், வன காப்பாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் திறன் தேர்வு நடத்தப்படும்.

மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு மூலமாக 174 வனவர்களையும், 377 வனக் காப்பாளர்களையும், 58 வனக் காவலர்களையும் தேர்வுசெய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x