Published : 20 Dec 2018 10:57 AM
Last Updated : 20 Dec 2018 10:57 AM

ரூ.5-க்கு டீ; பாத்திரத்தில் பார்சல்; பிளாஸ்டிக் தவிர்ப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டும் டீக்கடைக்காரர்

சிவகங்கை தெற்கு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த சித்திக் மகன் நயினா முகம்மது (43). இவர், அப்பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு டீ விற்பதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பிளாஸ்டிக்கை தவிர்த்து கடை நடத்தி வருகிறார்.

வரும் ஜனவரி 1 முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், நயினா முகமது 2011-ம் ஆண்டிலிருந்தே தனது கடையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டார். அதோடு பல ஆண்டுகளாக ஒரு டீயின் விலையை ரூ.5-க்கு வழங்கி வருகிறார். பால், டீத்தூள், சர்க்கரை விலை உயர்ந்தாலும், டீ விலையை உயர்த்தாமல், குறைவான வருவாயே போதும் என்று கடையை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து டீக்கடைக்காரர் நயினா முகமது கூறியதாவது: ஏழாம் வகுப்பு படித்தபோது, தந்தைக்கு உதவியாக டீக்கடைக்கு வந்தேன். பின்னர் எனக்கும் டீக்கடையே தொழிலானது. ஒரு கிளாஸ் டீ 20 பைசாவில் ஆரம்பித்து, தற்போது ரூ.5-ல் வந்து நிற்கிறது. தந்தை தள்ளுவண்டியில் டீக்கடை ஆரம்பித்ததால், மற்றவர்கள் வண்டிக்காரர் டீக்கடை என்றுதான் அழைப்பார்கள்.

2011-ல் முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் தந்தை சித்திக்கை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வரிசையில் நிற்க வைப்பதிலிருந்து படுக்க பாய் கொடுப்பது வரை அனைத்துக்கும் பணத்தைப் பறித்தனர். அங்குள்ள ஒரு கடையில் தாகத்துக்கு டம்ளரில் தண்ணீர் பிடித்துக் குடித்தபோது அந்தக் கடைக்காரர் 2 ரூபாய் தருமாறு கேட்டார். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. இதையடுத்து, என்னுடைய டீக்கடையை அதிக லாபநோக்கமின்றி நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை 5 ரூபாய்க்கு மட்டுமே டீ விற்கிறேன். அதிகாலை 5 மணியிலிருந்து 12 மணி வரையிலும் பிற்பகல் 4 முதல் 6 மணிவரை மட்டுமே வியாபாரம். அந்த வருமானமே போதும் என இருந்துவிடுவேன். எனது மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். கடை வாடகை, வீட்டு வாடகை, எனக்கு சம்பளம் கிடைத்தால் போதும் என்ற திருப்தியுடன் கடையை நடத்தி வருகிறேன்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கப்களில் டீ வழங்குவதில்லை. பாத்திரம் கொண்டு வருவோருக்கு மட்டுமே டீ பார்சல் கொடுப்பேன். இதனை உணர்ந்த வாடிக்கையாளர்களும் பிளாஸ்டிக் கப், பைகளை தவிர்க்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x