நல்ல குளத்திலேயே தாமரை மலரவில்லையே! பிறகு எப்படி சேற்றில் மலரும்? - திருநாவுக்கரசர் கிண்டல்

நல்ல குளத்திலேயே தாமரை மலரவில்லையே! பிறகு எப்படி சேற்றில் மலரும்? - திருநாவுக்கரசர் கிண்டல்
Updated on
1 min read

நல்ல குளத்திலேயே தாமரை மலரவில்லை என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், "5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மகத்தான ஆதரவைத் தந்துள்ளனர். ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் நல்ல பயனைத் தந்துள்ளது. பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக குறைவான இடங்களையே பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்துத்துவ அமைப்புகளான ஆர்எஸ்எஸ், விஹெச்பி ஆகியவற்றின் கருவறைகள். அந்தக் கருவறைகளிலேயே கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்பதும், மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என்பதும் இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நேற்று 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் பலமான அஸ்திவாரத்தை ராகுல் காந்தி அமைத்துள்ளார். எதிர்கால காங்கிரஸின் வெற்றிக்கு இது முன்னோட்டமாக அமைந்துள்ளது" என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திருநாவுக்கரசர் பதிலளித்தார்.

காங்கிரஸ் அமைக்கும் கூட்டணி வெற்றி பெறாது என தமிழிசை தெரிவித்துள்ளாரே?

தமிழிசை தோல்வி காரணமாக மனச்சோர்வில் ஏமாற்றத்தில் பேசுகிறார். இதனால் தமிழிசை தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்.

கூட்டணிக் கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மாட்டார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளாரே?

ஆனால், அந்தக் கூட்டணிக் கட்சிகள் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கப் போவதில்லை. பெரும்பாலான கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டனர். சில கட்சிகள் பின்னர் தெரிவிக்கும். இந்தப் பின்னடைவில் இருந்து முதலில் பாஜக மீளட்டும்.

இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பாஜகவுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்று பாஜக செல்வாக்குள்ள மாநிலங்களிலேயே தோற்றுவிட்டார்கள். நல்ல தண்ணீர் உள்ள குளத்திலேயே தாமரை மலரவில்லை. தமிழிசை உள்ளிட்டோர் சேறு, சகதி என கூறும் தமிழ்நாட்டில் எப்படி தாமரை மலரும்? வட மாநிலங்களிலேயே தாமரை காணாமல் போய்விட்டது. தென் மாநிலங்களில் பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்காது.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in